ரபேல் ஒப்பந்த நடைமுறைகள் தொடர்பாக அறிக்கை அளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரஃபேல் விமான விவகாரத்தில் இந்திய அரசு முன்மொழிந்ததால் தான் அனில் அம்பானி நிறுவனத்துடன் வேறு வழியின்றி டசால்ட் நிறுவனம் சேர்ந்து செயல்பட வேண்டியிருந்ததாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே தெரிவித்தார். இந்த கருத்தால் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் வார்த்தை போர் மூண்டது.
ரபேல் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் இதனை மத்திய அரசு மறுத்து வரும் நிலையில், ரபேல் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.சர்மா பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, ரபேல் போர் விமானங்களை சராசரி விலையை விட கூடுதல் விலைக்கு வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருப்பதாக மனுதாரர் வாதாடினார். ஆனால், ராணுவ ரகசியம் சார்ந்த விஷயம் என்பதால் இதை வாதிடக் கூடாது என மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, ரபேல் ஒப்பந்தம் நடைமுறை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சமர்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.