ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை குறித்து இடைக்கால அறிக்கை வெளியிட ஆறுமுகசாமி ஆணையத்துக்கு சசிகலா தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ இதய நோய் மருத்துவர் சத்தியமூர்த்தி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.
விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு சிகிச்சை அளித்த குழுவில், சத்தியமூர்த்தியும் இருந்துள்ளார்.
ஜெயலலிதா வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த போது, அவர் அருகிலேயே இருந்ததாக சத்தியமூர்த்தி வாக்குமூலம் அளித்தார்" எனக் கூறினார்.
"ஜெயலலிதா சிகிச்சையின் போது எடுக்கப்பட்ட வீடியோ உண்மைதன்மை தொடர்பான அறிக்கையும் ஆணையம் இதுவரை வெளியிடவில்லை.
எங்களை பொறுத்தவரை இதுவரை நடந்த விசாரணையின் விவரங்களை, இருக்கும் ஆதாரத்தின் அடிப்படையில் ஆணையம் இடைக்கால அறிக்கை வெளியிட வேண்டும்" என ராஜா செந்தூர்பாண்டியன் கேட்டுக்கொண்டார்.