தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Anbumani Ramadass says action must take to prevent swine flu in Tamil Nadu

by Isaivaani, Oct 16, 2018, 17:25 PM IST

வட மாநிலங்கள், தென் மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்திலும் வேகமாக பரவி வரும் பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்துல பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை ஏற் படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல், இப்போது தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தெற்கு எல்லையான திருநெல்வேலியில் தொடங்கி சென்னை வரை பலர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் தமிழக ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 4 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட அறைகளில் மருத்துவம் பெற்று வருகின்றனர். திருச்சி தோகைமலையில் இன்னொருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அங்குள்ள மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்கள் தவிர, வேலூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் 5 பேர் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர சென்னை பெரம்பூரைச் சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவரும் பன்றிக் காய்ச்சலுக்கு உயிரிழந்திருக்கிறார். ஆனால், வழக்கம் போலவே அவர் மர்மக் காய்ச்சலுக்கு உயிரிழந்து விட்டதாக அறிவித்து, சென்னையில் பன்றிக்காய்ச்சல் பரவியதை மூடி மறைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. இது அறியாமையை ஊக்குவித்து பன்றிக் காய்ச்சல் பரவத் தான் உதவுமே தவிர, தடுப்பதற்கு உதவாது.

பன்றிக்காய்ச்சல் கடந்த 2009-ம் ஆண்டு தான் இந்தியாவில் பெரிய அளவில் பரவியது. அதற்குப் பிந்தைய 10 ஆண்டுகளில் நடப்பாண்டில் தான் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மராட்டியத்தில் 1500-க்கும் மேற்பட்டோர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பன்றிக் காய்ச்சலுக்கான மருத்துவம் கடந்த 10 ஆண்டுகளில் மிகப் பெரிய முன்னேற்றம் கண்டிருப்பதால், பன்றிக் காய்ச்சலை நினைத்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. அதுமட்டுமின்றி, விழிப்புணர்வுடன் இருப்பதன் மூலம் பன்றிக் காய்ச்சலைத் தடுக்க முடியும்.

பன்றிக் காய்ச்சல் மனிதர்களிடமிருந்து மட்டும் தான் பரவும். இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வெளியேறிய வைரஸ்கள் கட்டிடங்களில் தரைகள், கதவுகள், நாற் காலிகள், மேசைகள் ஆகிய வற்றில் சில மணி நேரங்கள் முதல் இரு நாட்கள் வரை உயிர்வாழக்கூடும்.

அவற்றை தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், வெளியிடங்களுக்கு சென்று வருபவர்கள் கைகளை சோப்புகளால் கழுவுவது, கழுவாத கைகளால் கண்கள், வாய், மூக்கு ஆகியவற்றை தொடாமல் தவிர்ப்பது ஆகியவற்றின் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தொலைவுக்கு விலகி இருப்பது மிகவும் பாதுகாப்பானதாகும்.

வடகிழக்கு பருவமழை எந்த நேரமும் தொடங்கக் கூடும் என்பதால் ஈரப்பதமான சூழலில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் எச்1 என்1 வைரஸ்கள் வேகமாகப் பரவக்கூடும். எனவே, இனியும் அரசு அலட்சியம் காட்டாமல் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

You'r reading தமிழகத்தில் பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை