துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தாம் தோசை சாப்பிட்டதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
ஆசிய ஐரோப்பிய நாடுகளுக்கான (Asia-Europe Meeting - ASEM) 12வது உச்சிமாநாடு பெல்ஜியம் நாட்டின் புரூசெல்ஸ் நகரில் நடக்கிறது. இதற்காக இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மூன்று நாள் பயணமாக பெல்ஜியம் சென்றுள்ளார்.
அப்போது பெல்ஜியம் நகரில் அமைந்துள்ள சரவண பவன் உணவகத்திற்கு பெல்ஜியத்திற்கான இந்திய தூதர் கெய்ட்ரி இஸ்ஸார் குமார் மற்றும் தம்முடன் சென்ற இந்திய குழுவினருடன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்றார்.
புரூசெல்ஸில் இந்திய உணவகத்தில் உணவு உண்டது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாக தமது டுவிட்டர் பதிவில் துணை ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
சரவண பவன் உணவகத்தில் வெங்கையா நாயுடு தோசை சாப்பிட்டுள்ளார். உலகில் மிகப்பெரிய தென்னிந்திய சைவ உணவகம் சரவண பவன் ஆகும். 1981ம் ஆண்டு சரவண பவன் சென்னையில் முதன்முதலாக தொடங்கப்பட்டது.
இதன் நிறுவனர் ராஜகோபால், தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகேயுள்ள புன்னையடி கிராமத்தை சேர்ந்தவராவார். சரவண பவன் சைவ உணவகத்திற்கு இந்தியாவில் 33 இடங்கள் மற்றும் தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் 47 கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிய ஐரோப்பிய நாடுகளின் உச்சிமாநாட்டில் பொருளாதார குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுக்க மறுப்பது மற்றும் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை ஆகியவை உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளில் இணைந்து செயல்பட வேண்டுமென்று உறுப்பு நாடுகளுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தார்.
பல்வேறு நாடுகளில் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக அண்ட்வெர்ப் என்ற இடத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு துணை ஜனாதிபதி மலரஞ்சலி செலுத்தினார்.