முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய நவம்பர் 29ஆம் தேதி வரை தடையை நீட்டித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரசின் மூத்த தலைவரான ப.சிதம்பரம் மத்திய அமைச்சராக இருந்த போது ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்திசிதம்பரம் ஆகியோரது பெயர் இடம் பெற்றிருந்தது.
இந்த வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன் ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் பலமுறை அவரை கைது செய்ய தடை நீட்டித்தது.
இந்நிலையில் இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ப.சிதம்பரத்தை நவம்பர் 29-ஆம் தேதி வரை கைது செய்ய தடை நீட்டித்து நீதிபதி முப்தா குப்தா உத்தரவிட்டார்.