இந்து மதத்தை பின்பற்றுபவர்கள், அதிக கடவுள் பக்தி உள்ளவர்கள், அடிக்கடி கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பலரும் கையில் காப்புக் கயிறு கட்டியிருப்பார்கள்.
ஆனால், அதன் பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியத்தை யாரும் அவ்வளவு எளியதாக அறிந்திருக்க மாட்டார்கள்.
ஆனால், அதில் அறிவியல் உண்மைகள் பல அடங்கியிருக்கிறது. அந்த ரகசியங்களை இங்கு தெரிந்து கொள்வோம்:-
நம் உடலில் பல்வேறு முடிச்சுகள் இருக்கின்றன. ஒவ்வொரு முடிச்சுகளும் உடம்பின் இயக்கத்தை ஒழுங்குபடுத்துகின்றன. அந்த வகையில் இருக்கும் முக்கிய முடிச்சுப்பகுதி நம்முடைய மணிக்கட்டு ஆகும். இந்த இடத்தில்தான் இதயத்தின் இயக்க தன்மையை அறிந்துகொள்வதற்க்காக நாடி பிடித்து பார்ப்பார்கள்.
நம்முடைய எண்ணங்கள் மற்று மனநிலையின் அடிப்படையிலேயே நாடியின் செயல் பாடும் அமைகின்றது. நம்முடைய மணிக்கட்டு இடத்தில் கயிறு கட்டினாலும் அல்லது காப்பு போடுவதாலும் நாடியின் இயக்கம் சீராகிறது. எண்ணங்களும், மனநிலையும் அலைபாயாமல் இருக்கும்.
நம்மில் பலர் மஞ்சள், கருப்பு, சிவப்பு என பல்வேறு நிறங்களில் கயிறு கட்டுவது வழக்கம்.
இது தீய சக்தியை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலர் தங்கள் வசதிக்கேற்ப தங்கம், வெள்ளி, செம்பு என உலோகங்களில் காப்பு செய்து அணிந்து கொள்வார்கள். ஆனால் பட்டு, தர்ப்பை, அருகம்புல் ஆகிய மூன்றையும் கயிறாக திரித்து கையில் கட்டுவது என்பதுதான் அறிவியல் ரீதியாக சரியான ஒன்று.
இவை மூன்றும் மந்திர ஒளியில் இருந்து உருவாகும் அதிர்வுகளை ஈர்க்கும் தன்மை கொண்டவை. ஆகையால் இத்தகைய கயிறை நமது கையில் கட்டிக்கொண்டு மந்திரத்தை உச்சரித்தால், அந்த மந்திரத்திற்கான முழு பலனையும் பெறலாம். அதோடு இவை நவக்கிரக கதிர் வீச்சுகளையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை என்று அறியப்பட்டுள்ளது.
பட்டு நூலினால் ஆன காப்பு கயிறு அணிவதால் பலன் உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் அணிந்து கொள்ளலாம். நாம் அணியும் காப்பு கயிறு மந்திர ஆற்றலை சேமித்து நம்மை காக்கும்.
சிவப்பு நிறத்தில் கயிறு அணிவது நீண்ட ஆயுள் மற்றும் எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். கருப்பு நிறக்கயிறைக் கட்டுவதால் தீயவற்றின் பார்வையிலிருந்து விடுபடலாம். இதை குழந்தைகள் இடுப்பில் கட்ட கண் திருஷ்டி விலகும்.
ஆரஞ்சு அல்லது காவி நிறக்கயிறு மணிக்கட்டில் கட்டுவதால் புகழ், அதிகாரம் சேரும்.
இத்தகைய காப்பு கயிறை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது சிறப்பு.
மேலும், நாயுருவி, சீதெவி செங்கழுநீர், அருகம்புல் போன்ற சில மூலிகைகளின் வேரையும் இதுபோல் மந்திர உருவேற்றி குளிசத்தில் (தாயத்து) அடைத்து அணிவார்கள். காசிக்கயிற்றில் முருகன், பிள்ளையார், சிவன், திருப்பதி போன்ற தெய்வங்களின் டாலர்களை கோர்த்து கழுத்தில் மாலையாகவும் அணிவார்கள்.
இதுவும் ஒரு வகையில் தீய சக்திகளிடமிருந்து நம்மை காப்பதே ஆகும். நாகரிகம் முற்றி வரும் இக்காலத்தில் பட்டையாக திருநீரு அணிய தயங்குபவர்கள் காசிக்கயிறு, அம்மன் கயிறு போன்ற காப்பு கயிறுகளை அணிந்து, கெட்ட சக்திகளிடம் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம். குழந்தைகளுக்கும் இடுப்பில் அணிவித்து தீய சக்திகளிடமிருந்து காத்துக்கொள்ளலாம்