கந்துவட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்த பயங்கரம் நடந்தது. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசி தர்மத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (28). இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2).
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலெட்சுமி, காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த முத்துலெட்சுமி என்ற பெண்ணிடம் ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார். அதற்கு மாதந்தோறும் பணம் கட்டி வந்துள்ளார். இதுவரை கடன் வாங்கிய பெண்ணிடம் வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்து 34 ஆயிரம் கொடுத்துள்ளார்.
ஆனால் அந்த பெண் வட்டி மட்டும் தான் கொடுத்துள்ளதாகவும், அசல் பணத்தை கட்டவில்லை எனவும் கூறி பணம் கேட்டுள்ளார். இதுகுறித்து இசக்கிமுத்து அச்சன்புதூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஆனால் அதன் மீது போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் இது தொடர்பாக இசக்கிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை மனு கொடுத்துள்ளார். ஆனால் மனு மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், திங்களன்று காலை, இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார்.
பொதுமக்களிடம் மனுக்கள் வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டிருந்தார். ஆனால், திடீரென இசக்கிமுத்து கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும் 2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார்.
மேலும், இசக்கிமுத்து தன் உடலில் மட்டுமல்லாது, தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அனைவரது உடலிலும் தீ வைத்தார். 4 பேர் மீதும் தீ பற்றி எரிந்தது. அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர்.
சிறிது நேரத்தில் இசக்கிமுத்து, அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர். உடல் முழுவதும் கருகி, உயிருக்குப் போராடிய நிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.
கடுமையான தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் சுப்புலெட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்குப் போராடி வருகிறார்.