மதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் மீனாட்சி அம்மனுக்கு நாளை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவின் 8ம் நாளான நேற்று மீனாட்சி அம்மனுக்கு கோலாகலமாக பட்டாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நேற்று இரவு 7.40 மணிக்கு அம்மன் சன்னதி ஆறுகால் மண்டபத்தில் மீனாட்சி அம்மன் மச்ச முத்திரை, இடப முத்திரை, ரத்தின ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, பாண்டிய மன்னர்களின் அடையாளமான வேப்பம்பூ மாலை மற்றும் ராயர் கிரீடம் அணிந்திருந்தார்.
தொடர்ந்து, 8 மணிக்கு கோயில் தக்கார் கருமுத்து கண்ணன் மீனாட்சி அம்மனிடம் இருந்து ரத்தினங்கள் பதித்த செங்கோல் பெற்று, சகல விருதுகளுடன் சாமி சன்னதி 2ம் பிரகாரம் சுற்றி வந்து, மீண்டும் மீனாட்சியம்மன் திருக்கரத்தில் செங்கோலை சமர்ப்பதித்தார். பின்னர், நேற்று முதல் 4 மாதங்கள் மதுரையில் மீனாட்சி ஆட்சி துவங்கியது என கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பின்பு, வெள்ளி சிம்மாசனத்தில் பட்டாபிசேக கோலத்தில் மீனாட்சியும், பிரியாவிடையுடன் சுந்தரரேஸ்வரரும் மாசி வீதிகளில் வலம் வந்தனர். 9ம் நாளான இன்று விழாவாக திக்குவிஜயம் நடைபெறுகிறது. நாளை காலை 9.05 மணிக்கு மீனாட்சி, சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.