பொதுவாக திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரியமாதங்களில் புரட்டாசியும் ஒன்றென்கின்றனர். புதனின் அதி தேவதையாகவும், பிரத்யதி தேவதையாகவும் இருப்பவர் மஹாவிஷ்ணு. ஆகவே விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. இந்த மாதத்தை "எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப் படும் விரதம் ஆகும். சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார்.
சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.