சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் வருகிற 14ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சபரிமலையில் வெளிமாநிலங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர்.
ஆண்தோறும் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்கு அதிகளவில் வருகை தருவார்கள். அதேபோல் இந்த ஆண்டும், கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. மகரவிளக்கு பூஜைக்கு சில நாட்களே உள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள் வனப்பகுதிகளிலேயே கூடாரம் போட்டு தங்கி தரிசனத்தை காண காத்திருக்கின்றனர்.
பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், சுமார் 12 மணி நேரம் வரை காத்திருந்த பிறகே சுவாமி ஐயப்பனை பக்தர்கள் தரிசனம் செய்ய முடிகிறது.
மகரவிளக்கு பூஜையின் முக்கிய நிகழ்வுகள் குறித்து இங்கு பார்க்கலாம்:
மகரவிளக்கு பூஜை காலத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளின் ஒன்று பேட்டை துள்ளல். இந்த நிகழ்வு நாளை சபரிமலை எரி மேலியில் நடைபெறுகிறது. எந்த பாகுபாடும் இல்லாமல் ஐயப்ப பக்தர்கள் தங்கள் உடலில் வர்ணம் பூசிக் கொண்டு கைகளில் இலை, தழைகளை ஏந்தியவாறு சரணகோஷம் முழங்க ஆடிப்பாடி ஐயப்பனை வழிபடும் இந்த நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்பார்கள்.
அம்பல புழை, ஆலங்கோடு பக்தர்கள் இந்த பேட்டை துள்ளலில் பங்கேற்ற பிறகு பெறுவழி பாதை வழியாக சுவாமி ஐயப்பனை தரிசிக்க செல்வார்கள். சபரிமலைக்கு எப்போது கன்னி சாமிகள் வருகை தராமல் இருக்கிறார்களோ அப்போது மாளிகை புரத்தம்மனை திருமணம் செய்து கொள்வதாக ஐயப்பன் உறுதி கொடுத்ததாக ஐதீகம்.
இதையொட்டி மாளிகைபுரத்தமன் வருகிற 14ம் தேதி சபரிமலையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 18ம் தேதி அவர் சரங்குத்தி வரும்போது கன்னி சாமிகள் சபரிமலைக்கு வருகை தந்தற்கு அடையாளமாக அங்கு சரங்குத்தப்பட்டு இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் மீண்டும் மாளிகைப்புரத்திற்கு திரும்பிச்செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
மகரவிளக்கு பூஜையை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். ஆள் இல்லாத குட்டி விமானம் மூலமும் கண்காணிப்பு பணீ தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.