ஈரோடு மாவட்ட அமமுக நிர்வாகிகள் ஏராளமானோர் இன்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். இதற்கு தினகரன் கட்சியினர், எங்கள் கட்சியிலிருந்து நீக்கியவர்களைத் தான் திமுகவில் சேர்த்துள்ளனர் என்று பதிலடி கொடுத்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
ஈரோடு மாநகர அமமுக செயலாளர் பருவாச்சி பரணீதரன், மாநில மாணவரணி இணைச் செயலாளர் ஈரோடு பிரபு மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று இணைந்துள்ளனர். இவர்களை கட்சி மாறச் செய்ததில் சமீபத்தில் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் கரூர் செந்தில் பாலாஜி முக்கியப் பங்கு வகித்துள்ளார். இன்று ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு நடந்த போது செந்தில் பாலாஜியும் உடனிருந்தார்.
திமுகவில் இன்று இணைந்தவர்கள் அனைவரும் அமமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டவர்கள். அவர்களைத் தான் திமுக சேர்த்துள்ளது. நீக்கப்பட்டவர்களை சேர்த்து பெருமை கொள்ளும் அளவுக்கா திமுகவின் நிலைமை இருக்கிறது? என்று கூறி தினகரனின் அறிவிப்புக் கடிதத்தையும் பதிவிட்டுள்ளனர்.
ஆனால் திமுகவில் சேர்ந்த அமமுக நிர்வாகிகளை நீக்கம் செய்து தினகரன் வெளியிட்ட அறிவிப்புக் கடிதத்தில் இன்றைய தேதியே உள்ளது. இதனால் அமமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் திமுகவில் இணைந்தார்களா? அல்லது திமுகவில் இணைந்ததால் அமமுகவில் நீக்கப்பட்டார்களா? என்ற வாதங்கள் சூடாகிக் கிடக்கிறது.