தமிழகத்தில் லோக்சபா , மினி சட்டசபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று ஒரே நாளில் திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் வேட்பாளர்களை விறுவிறுவென அறிவிக்க, ஒரே நாளில் தேர்தல் களம் பரபரப்பாகி விட்டது. யார்? எங்கே போட்டி? யார் ஜெயிப்பார்? என்ற விவாதங்களும் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.
தமிழகத்தில் இந்த முறை சுட்டெரிக்கும் கோடை வெயிலை விட பல தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் அனலைக் கக்கப் போவது உறுதியாகிவிட்டது. அதில் முக்கிய விஐபி தொகுதியாக துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் போட்டியிடும் தேனி தொகுதி மாறி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆண்டிபட்டி, பெரியகுளம் சட்டசபைக்கும் இடைத் தேர்தல் நடப்பதால் கூடுதலாகவே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி தொகுதியில் ஓ.பி.எஸ்.மகன் ரவீந்திரநாத் போட்டியிடப் போகிறார் என்று ஆரம்பம் முதலே கூறப்பட்டாலும், அம முக தரப்பில் டிடிவி தினகரனோ, தங்க. தமிழ்ச்செல்வனோ எதிர்த்து நின்றால் வெற்றி என்பது சவாலாக இருக்கும் என்று நினைத்து அருகிலுள்ள மதுரை, விருதுநகர் தொகுதிகளிலும் ஒரு கண் வைத்திருந்தார் ரவீந்திரநாத் .
கடைசியில் ரவீந்திரநாத் தேனியிலேயே போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரு முறை எம்.பி.யாக இருந்த ஆரூண் போட்டியிடுவாரா? அல்லது அவரது மகனை களமிறக்குவாரா ? என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் நிலவுகிறது. அமமுக தரப்பிலோ நேற்று அறிவிக்கப்பட்ட முதல் பட்டியலில் தேனி மக்களவைக்கும், பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டசபைக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாதது ஏகப்பட்ட யூகங்களை எழுப்பியுள்ளது.
இந்நிலையில் தான் தேனி தொகுதி என் சொந்தத் தொகுதி. நான் எம்.பி.யாக ஏற்கனவே ஜெயித்த தொகுதி. நானே போட்டியிட்டாலும் ஆச்சர்யமில்லை என்ற டிடிவி தினகரன் கொளுத்திப் போட்டுள்ளார். இதனால் தினகரன் போட்டியிடுவாரா? இல்லை தங்க .தமிழ்ச்செல்வனை களமிறக்கி ஓ பிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை ஒரு கை பார்க்கப் போகிறாரா? என்ற பரபரப்புத் தீ தேனி தொகுதியில் இப்போது பற்றிக் கொண்டுவிட்டது என்பது தான் உண்மை நிலவரமாக உள்ளது.