அதிமுகவில் ஓ.பி.எஸ்சையும், இபிஎஸ்சையும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மிரட்டுகிறார்கள். இருவரும் தலைமைக்கு தகுதியானவர்கள் இல்லை என்று கட்சியிலிருந்து விலகிய அதிமுக செய்தித் தொடர்பாளரும், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏவுமான மார்க்கண்டேயன் குற்றம் சாட்டியுள்ளார்.
விளாத்திகுளம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவாக இருந்த மார்க்கண்டேயன் தற்போது நடைபெற உள்ள இடைத்தேர்தலில் சீட் கொடுக்காத அதிருப்தியில் கட்சியின் செய்தித் தொடர்பாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ, முதல்வரையும், துணை முதல்வரையும் மிரட்டியதுதான் காரணம் என்று சரிமாரி குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார்.
அதிமுக ஒன்றாக செயல்பட வேண்டும் என்று நம்பித்தான் ஓ பிஎஸ் பின்னால் சென்றோம். ஆனால் அவரோ நம்பி உடன் வந்தவர்களை கைவிட்டு தன் தம்பிக்கும், மகனுக்கும் பதவி, சீட் வழங்குவதில் குறியாக உள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் தலைமைக்கு லாயக் கில்லை. விளாத்திகுளம் தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுக்காததற்கு காரணம் அமைச்சர் கடம்பூர் ராஜூ முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மிரட்டியது தான் காரணம். தன் ஆதரவு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மூலம் முதல்வரை மிரட்டி தனது ஆதரவாளருக்கு தொகுதியை ஒதுக்கச் செய்து விட்டார். அமைச்சர் கடம்பூர் ராஜுவை விளாத்திகுளம் தேர்தல் பொறுப்பாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்.
இனிமேல் தொகுதி ஒதுக்குவதாக அறிவித்தாலும் மீண்டும் ஏற்கமாட்டேன். இந்தத் தேர்தலுக்குப் பின் ஓபிஎஸ், இபிஎஸ் காணாமல் போவார்கள். ஜெயலலிதா போன்று ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக செயல்படும் என்ற மார்க்கண்டேயன் அதிமுக செய்தித் தொடர்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.