பாலியல் வழக்கில் ஓராண்டாக சிறையில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவி நீண்ட போராட்டத்துக்குப் பின் இன்று சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார். 3 கட்டைப் பைகளில் துணிமணி உள்ளிட்ட பொருட்களுடன் சிறைக்கு வெளியில் வந்த நிர்மலாவை வரவேற்க உறவினர்கள் யாரும் வராததால் அவருடைய வழக்கறி ஞரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தம்மிடம் படிக்கும் கல்லூரி மாணவிகளை தவறான வழியில் அழைத்ததாக பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கடந்தாண்டு ஏப்ரல் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் நிர்மலாதேவிக்கு உடந்தையாக இருந்ததாக மதுரை காமராசர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு விசாரணை முடிவடைந்து குற்றப்பத்திரிகை தாக்கலான நிலையில், நிர்மலாதேவி பல முறை ஜாமீன் கேட்டும் அரசுத் தரப்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இறுதியில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கடந்த 12-ந் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கியது. ஆனால் உறவினர்கள் யாரும் ஜாமீன் உத்தரவாதம் தர முன்வராததால் நிர்மலாதேவி சிறையிலிருந்து வெளியே வர முடியாமல் தவித்தார்.
இதனால் நிர்மலாதேவியின் உறவினர்களை தேடி அலைந்த வழக்கறிஞர் பசும்பொன்பாண்டியன் ஒரு வழியாக நிர்மலாதேவியின் சகோதரர் ஒருவரை சமாதானம் செய்து, நேற்று சொத்து ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்திட்டார். நிர்மலாதேவியின் குடும்ப நண்பர் ஒருவரும் கையெழுத்திட சிக்கல் தீர்ந்தது .இதனால் இன்று காலை மதுரை மத்திய சிறையிலிருந்து நிர்மலாதேவி ஜாமீனில் வெளியில் வந்தார்.
3 கட்டைப் பைகளில் துணிகள், பொருட்களுடன் சிறைக்கு வெளியே வந்த நிர்மலாதேவியை தன்னந்தனியே அனுப்பாமல் உறவினர்கள் அல்லது அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது சிறை விதி. உறவினர்கள் யாரும் வராததால் நிர்மலாதேவியை அவருடைய வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனிடம் ஒப்படைத்தனர்.