தேர்தல் முடிந்தவுடன் அரசு அறிவித்தபடி ஏழைகளுக்கு ரூ 2000 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு இந்தத் தடவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் நட்சத்திரப் பேச்சாளர். மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கி விட்டார். தனது சொந்த மாவட்ட மான சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி, கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தேமுதிகவின் எல்.கே.சுதீசை ஆதரித்து வேன் பிரச்சாரத்தை தொடங்கினார். மாலையில் தருமபுரியில் பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணியை ஆதரித்துப் பேசினார்.
இன்று காலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுகவை கடுமையாக விமர்சித்தார். அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது.கட்டப் பஞ்சாயத்து, அராஜகம் இல்லாத அமைதி மாநிலமாக தமிழகம் உள்ளது. தேர்தலுக்காக திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யானது. அதிமுகவோ நிறைவேற்றக் கூடிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
பொங்கலுக்கு பரிசாக ரூ 1000 வழங்கியதை திமுக தடுக்க முயன்றது. இப்போது ஏழைகளுக்கு அறிவித்துள்ள சிறப்பு நிதி ரூ 2000 வழங்கவும் தடை ஏற்படுத்தியுள்ளனர். தேர்தல் முடிந்தவுடன் விண்ணப்பித்த அனைவருக்கும் ரூ 2000 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்தார்.