வாக்குப்பதிவு நடைபெற்ற பின்னரும் மின்னணு எந்திரத்தில் முறைகேடுகள் செய்ய சதி நடப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்துள்ள சந்திரபாபு நாயுடு, அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ்.பாரதி, மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பார்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தெலுங்கு, தமிழ் மக்கள் உறவு அண்ணன், தம்பி உறவு போன்றது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடக்கவில்லை. மோடியின் ஆட்சி தான் நடக்கிறது. அதிமுகவுக்கு ஒரு ஓட்டு போட்டாலும் அது மோடிக்குத்தான் செல்லும். தமிழக விவசாயிகள் டெல்லியில் போராடியது போது பிரதமர் மோடி, அவர்களை கண்டுகொள்ள வில்லை.
திமுக தலைவர் கருணாநிதி சிறந்த தலைவர். அவரது மறைவுக்குப் பிறகு, அவர் மகன் மு.க.ஸ்டாலினை முதல்வராக பார்க்க, மக் கள் விரும்புகிறார்கள். ஆளும் அரசின் காரணமாக. ஜனநாயகம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. தமிழக வாக்காளர்களுக்கு வேண்டுகோள் கொடுக்கவே சென்னை வந்துள்ளேன்.
உலகில் 10 சதவிகித நாடுகளே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை பயன்படுத்தி வருகின்றன. அதில் மோசடி நடக்கிறது. வாக்குப் பதிவுக்கு பின்னரும் அந்த இயந்திரங்களில் முறைகேடு நடக்கிறது. விவிபேட் கருவியில் ஒப்புகைச் சீட்டு பார்க்க 7 நொடிகள் இருந்த நேரத்தை 3 நொடிகளாக மாற்றியுள்ளனர் என்று சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.