தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கைப்பாவையாக உள்ளது என்று டி.டி.வி.தினகரன் கூறியிருக்கிறார்.
சென்னன அடையாரில் உள்ள வாக்குச்சாவடியில் காலை 9.15 மணிக்கு வாக்களித்து விட்டு அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி :
ஆண்டிப்பட்டியில் எங்கள் வேட்பாளர் ஜெயக்குமார் அலுவலகம் ஒரு பெரிய காம்ப்ளக்ஸில் கீழ் தளத்தில் சிறிய இடத்தில் இருக்கிறது. அந்த காம்ப்ளக்ஸ் அ.தி.மு.க. பிரமுகர் அமரேசனுக்கு சொந்தமானது. அந்த காம்ப்ளக்ஸில் எப்படி எங்க கட்சிக்காரர்கள் பணம் வைத்திருப்பார்கள்?
அ.தி.மு.க.வினர் பணம் வைத்திருப்பது தெரிந்து எங்க கட்சிக்காரர்கள்தான் புகாரே கொடுத்தது. ஆனால், அவர்கள் சோதனையிட்ட போது எங்க கட்சிக்காரர்களை அப்புறப்படுத்த முயன்றார்கள். அப்போது தேவையில்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதுதான் உண்மை.
தேனி தொகுதியில் ஓ.பி.எஸ். மகன் ஓட்டுக்கு 2 ஆயிரம் கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு முழுக்க அவர்கள்தான் பணம் கொடுத்தார்கள். நான் அதை தடுக்க வேண்டாம் என்று எங்க கட்சிக்காரர்களிடம் சொல்லி விட்டேன். மக்கள் எங்கள் பக்கம் இருப்பதால் நாங்க பணம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, தேர்தல் ஆணையம், மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. மோடி அத்தனை அரசு இயந்திரங்களையும் துஷ்பிரயோகம் செய்கிறார். இங்குள்ள எடப்பாடி அரசு, மத்திய அரசின் எடுபிடி அரசாகவே இருக்கிறது. அதிகாரிகளும் இந்த அரசின் எடுபிடிகளாக செயல்படுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.
தமிழக அரசாங்கமே மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது. தமிழ்நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால், தேசியக் கட்சிகளை புறக்கணித்து விட்டு, தமிழக மக்களுக்கு உண்மையாக போராடும் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும். தமிழ்நாட்டின் இளைஞர்கள் எழுச்சியாக இருக்கிறார்கள். தாய்மார்களும் உணர்ச்சிகரமாக இருக்கிறார்கள். அவர்கள் சரியாக வாக்களிப்பார்கள்.
இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.