சபாநாயகர் நடுநிலைமை தவறினால்...? நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் - மு.க.ஸ்டாலின்

Will move no confidence motion, Dmk President mk Stalin warns tn Assembly speaker

by Nagaraj, Apr 26, 2019, 21:06 PM IST

நடுநிலைமை தவறி, மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது திமுக சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதிமுக அதிருப்தி எம் எல்ஏக்கள் 3 பேருக்கு சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருப்பது குறித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் இன்று பேரவைத் தலைவரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள ஆளுநரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர். அதன் பலன் பா.ஜ.க.விற்கு அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணியாக மாறியது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினம் தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் 17-வது மக்களவைத் தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு உச்சநீதிமன்றம் தலையிட்டதால் வருகின்ற மே 19-ந் தேதி மீதியுள்ள நான்கு தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் - சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து பேரவைத் தலைவரை சந்தித்து இந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக் கொடுத்திருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அதிமுக அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்து விடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிகழ்வு மக்களைவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதலமைச்சரும் - அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை- மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்க வைத்து விட வேண்டும் என்பதில் அதிமுகவை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் ஆளுநரும் தொடர்ந்து செயல்படுவது கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரைப் பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். பாரபட்சமற்ற முறையில் பேரவைத் தலைவரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக உச்சநீதிமன்றம் பேரவைத் தலைவர்களை எச்சரித்துள்ளது.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இன்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது பேரவைத் தலைவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது. ஓ. பன்னீர் செல்வமும் அவருடன் முதலமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்து விட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் பேரவைத் தலைவர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு கொல்லைப்புற வழியாக மெஜாரிட்டி தேடித்தர முயலக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, பேரவைத் தலைவர் அந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள்மீது நடவடிக்கை எடுத்தால், பேரவைத் தலைவர்மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

You'r reading சபாநாயகர் நடுநிலைமை தவறினால்...? நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம் - மு.க.ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை