சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என நான் கூறியது சரித்திர உண்மை. நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்று கூட பேசியிருப்பேன். தீவிரவாதம் என்ற அர்த்தத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள், சரித்திர உண்மையை சொன்னால் என் மீது கோபப்படுகின்றனர் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், அரவக்குறிச்சியில் தாம் பேசியதை நியாயப்படுத்தி அழுத்தம் திருத்தமாக விளக்கம் கொடுத்துள்ளார்.
சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் கோட்சே என்று 3 நாட்களுக்கு முன், அரவக்குறிச்சியில் கமல் பேசியது பெரும் சர்ச்சையாகியுள்ளது. பாஜக உள்ளிட்ட சில இந்துத்வா அமைப்பினரும், அதிமுக தரப்பிலும் கமலின் பேச்சுக்கு கடும் கண்டனக் குரல் எழுந்தது. கமலுக்கு எதிராக போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், டெல்லி, சென்னை நீதிமன்றங்களில் வழக்கும் தாக்கலானது.
இதனால் கடந்த 2 நாட்களாக பிரச்சாரத்தை ரத்து செய்து விட்ட கமல், இன்று திருப்பரங்குன்றம் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கினார். பிரச்சாரத்தின் போது கமலுக்கு எதிராக ஏதும் பிரச்னைகள் எழுந்து விடக் கூடாது என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட நிலையில் தோப்பூர் என்ற இடத்தில் இன்று மாலை கமல் பிரச்சாரத்தை தொடங்கி பேசுகையில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி என்று நான் கூறியது சரித்திர உண்மை. உண்மையை கூறினால் கோபப்படுகின்றனர். நான் கலவரத்தை தூண்டுவதாக கூறுவதால் என் மனம் புண்படுகிறது. என் வீட்டில் உள்ளவர்களும் இந்துக்கள் தான். அவர்கள் மனம் புண்படும்படி நான் பேச மாட்டேன்.
அரவக்குறிச்சியில் நான் பேசியதை முழுமையாகக் கேட்காமல் என் மீது குற்றம் சாட்டுகின்றனர். முதலில் தீவிரவாதம் என்றால் என்ன அர்த்தம் என்று புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் தீவிர அரசியலில் இறங்கிவிட்டோம். அதனால் தீவிரமாகத் தான் பேசுவோம். நான் நினைத்திருந்தால் பயங்கரவாதி என்று கூட பேசியிருக்க முடியும்.
என்னை அவமானப்படுத்த வேண்டும் என்று என் கொள்கைகளையே கையிலெடுக்க யாரும் நினைத்தால் தோற்றுப் போய் விடுவீர்கள். ஏனெனில் என் கொள்கையோ நேர்மை. ஆனால் பொய் சொல்வதையே அடிப்படையாகக் கொண்டவர்கள் என்னிடம் புரூடா விட முடியாது. இந்தத் தேர்தல் முடிவில் இந்த அரசு வீழும், வீழ்த்தப் படும், வீழ்த்துவோம் என்று அழுத்தம் திருத்தமாக கூறிய கமல், வீழ்த்துவோம் என்றால் ஜனநாயக ரீதியில் எந்தக் காயமும் இன்றி வீழ்த்துவோம் என்று அர்த்தம் என்று கூறி கூட்டத்தினரை கலகலப்பாக்கினார்.
அரவக்குறிச்சியில், இந்து தீவிரவாதி என தாம் பேசியதற்கு, ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி கமல் சமாளிக்கப் பார்ப்பார் என்று தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் கமலோ, இந்து தீவிரவாதி என தாம் பேசியது சரித்திர உண்மை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி எதிர்த்தரப்பினரை இன்னும் சூடேற்றியுள்ளார் என்பது அவரது இன்றைய பேச்சில் வெளிப்பட்டுள்ளது.