இந்து என்ற நாமகரணம் எப்போது வந்தது தெரியுமா..? மீண்டும் சர்ச்சையை கிளப்பும் கமல்!

ஆழ்வார்கள், நாயன்மார்கள் வாழ்ந்த காலத்தில் இந்து என்ற மதக் குறிப்பே கிடையாது என்றும், மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக, மதமாகக் கொள்வது எத்தகைய அறியாமை... என இந்து மதம் குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார் கமல்!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே என்று அரவக்குறிச்சி இடைத்தேர்தல் பிரச்சார களத்தில் கமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது. பிரச்சாரத்தில் பங்கேற்க முடியாத அளவுக்கு எதிர்ப்புகளும் கிளம்பின. அரவக்குறிச்சியில் கமல் மீது காலணி, முட்டைகளும் வீசப்பட்டன.

இதனால் இன்று சூலூரில் கமல் பிரச்சாரம் செய்ய தேர்தல் அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதைக் குறிப்பிட்டு, தனது பேஸ்புக் பக்கத்தில், இந்து மதம் குறித்து மீண்டும் ஒரு சர்ச்சை கருத்தை கமல் பதிவிட்டுள்ளார்.

மாற்றான் கொடுத்த இந்து என்னும் பட்டத்தை நாம் வைத்துக்கொண்டு சர்ச்சை உண்டாக்குவது அர்த்தமற்றது என்று கூறி கமல் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"சீப்பை ஒளித்து வைத்து, கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.

மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.

12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ, “இந்து” என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ “இந்து” என நாமகரணம் செய்யப்பட்டோம்.

ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர்.

நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் “பெயராக”, “மதமாகக்” கொள்வது எத்தகைய அறியாமை...

நாம் “இந்தியர்” என்கின்ற அடையாளம் சமீபத்தியது தான் எனினும் காலம் கடந்து வாழக்கூடியது.

நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக / அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு....

“ கூடி வாழ்ந்தால் கோடி நன்மை” என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம்.

“கோடி”ன்ன உடனே “பணம்” ஞாபகம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி!! “தமிழா” நீ தலைவனாக வேண்டும்.
இதுவே என் வேண்டுகோள்!" என கமல் குறிப்பிட்டுள்ளதை சர்ச்சையை அதிகரித்துள்ளது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்