பள்ளிகள் நாளை திறப்பு... கோடை வெப்பம் தான் கொளுத்துது... ஆனாலும் மாணவர்கள் உற்சாகமோ உற்சாகம்

All schools in Tamilnadu re-opens on tomorrow after summer vacation

Jun 2, 2019, 09:44 AM IST

கோடை விடுமுறைக்குப் பின் தமிழகத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. கோடை வெப்பம் கொளுத்தும் நிலையிலும் மாணவர்கள் புத்துணர்வுடனும், உற்சாகத்துடனும் தயாராகி வருகின்றனர். பள்ளிகளில் முதல் நாளிலேயே விலையில்லாப் புத்தகங்களை வழங்கவும், அரசுப் பள்ளிகளில் சீருடைகள் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

கோடை விடுமுறைக்காக தமிழகத்தில் பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் 2-வது வாரத்தில் விடுமுறை விடப்பட்டது. ஏறத்தாழ 50 நாட்களுக்கு பின்பு தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கோடை வெயில் வாட்டி வருகிறது. இன்னமும் பல மாவட்டங்களில் I00 டிகிரியைத் தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருவதால் பள்ளிகள் திறப்புத் தேதி தள்ளிப் போகலாம் என்றும் செய்திகள் பரவின. பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் திறப்புத் தேதி தள்ளிப் போனால் நல்லது என்றே எதிர்பார்த்தனர்.

ஆனால், திட்டமிட்டபடி பள்ளிகள் நாளை திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
அதன்படி, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும் நாளை திறக்கப்படுகின்றன. இதனால் பள்ளிகளைத் திறக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு விலையில்லாப் பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் மாணவர்களும் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.

You'r reading பள்ளிகள் நாளை திறப்பு... கோடை வெப்பம் தான் கொளுத்துது... ஆனாலும் மாணவர்கள் உற்சாகமோ உற்சாகம் Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை