ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரி போலீசில் சரண்

Feb 12, 2018, 08:27 AM IST

சென்னை: ஜெ.தீபா வீட்டிற்குள் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி சோதனை நடத்தி, பின்னர் தப்பி ஓடிய போலி அதிகாரி போலீசில் சரணடைந்துள்ளார்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும், எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபா தி.நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தீபாவின் வீட்டிற்குள் நுழைந்த நபர், தனது பெயர் மித்தேஷ் குமார் எனவும் வருமான வரித்துறையில் இருந்து வந்துள்ளாதகவும், போலீசார் மற்றும் கூடுதல் அதிகாரிகள் வந்தவுடன் வீட்டில் சோதனை நடத்தப்படும் என கூறினார். சோதனை நடத்துவதற்கான வாரண்டு ஒன்றையும் அந்த நபர் காட்டி உள்ளார்.

இது உண்மை என்று நம்பிய தீபாவும் அவரது கணவரும் அவரை உள்ளே அனுமதித்தனர். பின்னர், அதிகாரிகள் வரும் வரை தானே சோதனை நடத்துவதாகவும் கூறி வீட்டில் சோதனை நடத்தினார்.

இதனால், ஜெ.தீபா வேரவையின் வக்கீல் அணியினர் அந்த நபர் மீது சந்தேகமடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, மாம்பலம் உதவி கமிஷனர் செல்வம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் உள்பட 10க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்தனர்.

போலீசார் வருவதை தெரிந்து உஷாரான ஆசாமி வீட்டின் காம்பவுண்டு சுவர் ஏறி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதன் பின்னரே, அந்த நபர் வருமான வரித்துறை அதிகாரி இல்லை எனவும், போலியாக வந்து அதிகாரி போல் நடித்த ஆசாமி எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து, தீபாவின் கணவர் மாதவன் போலீசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய நபர் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்காக, இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், போலி அதிகாரி போல் நடித்து தப்பியோடிய அந்த நபர் நேற்று மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அந்த நபரிடம் விசாரித்ததில், அவரது நிஜப்பெயர் பிரபு என்பது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You'r reading ஜெ.தீபா வீட்டில் நுழைந்த போலி அதிகாரி போலீசில் சரண் Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை