அத்திவரதர் தரிசனத்தின் 39வது நாளான இன்று, தாமதமாக காலை 8 மணிக்குத்தான் பொது தரிசனம் தொடங்கியது. விஐபி, விவிஐபி தரிசனங்கள் காலையில் ரத்து செய்யப்பட்டன.
காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் 40 ஆண்டுகளுக்கு பிறகு அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. அத்திவரதர் கடந்த மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதாலும், அரசு நிர்வாகம் சரிவர திட்டமிடாததாலும் தினமும் பல்வேறு குழப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. நேற்று மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்தனர்.
அத்திவரதர் தரிசனப் பாதைகளில் 10 ஆயிரம் போலீசார் காவல் பணியில் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. அதனால், ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் பணியில் இருப்பவர்கள், பக்தர்களை அங்கும் இங்குமாக அலைக்கழிக்கின்றனர். உள்ளூர்காரர்களின் வாகனங்கள் மட்டுமின்றி, வெளியூர் வாகனங்களும் ஊருக்குள் நுழைந்து விடுவதால், எல்லா தெருக்களிலும் போக்குவரத்து நெருக்கடியாகவே காட்சி தருகின்றன. எப்போது இந்த விழா முடியுமோ என்று உள்ளூர்காரர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில், நாள்தோறும் கோயிலுக்கு வரும் கூட்டம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மேற்கு கோபுர வாயில் பகுதி வழியே வெளியேறும் பக்தர்களை அனுப்பி வைக்க இடதுபுறத்தில் 8 அடி உயரத்தில் தற்காலிக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 39வது நாளான இன்று காலை 5 மணிக்கு பொதுதரிசனம், வி.ஐ.பி. மற்றும் வி.வி.ஐ.பி. தரிசனம் தொடங்கப்படவில்லை. காலை 8 மணிக்கு பொது தரிசனம் மட்டும் தொடங்கப்பட்டது. வி.ஐ.பி, வி.வி.ஐ.பி தரிசனங்கள் காலையில் ரத்து செய்யப்பட்டன.
அத்திவரதர் தரிசனம் வருகிற 17ம் தேதி மதியம் 12 மணியுடன் நிறைவடைகிறது. அன்று கிழக்கு ராஜகோபுரம் மதியம் 12 மணியுடன் மூடப்படும். அதன் பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மட்டும் அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 16, 17ம் தேதிகளில் டோனர் பாஸ் தரிசனம், வி.வி.ஐ.பி. தரிசனம் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பொது தரிசனத்தில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அத்திவரதர் விழா முடிந்ததும், அவரை மீண்டும் குளத்தில் வைப்பதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கான குளத்தை சீரமைத்து, அத்திவரதர் இருக்கும் இடத்தையும் சுத்தப்படுத்தி தயார் செய்து வருகின்றனர்.
அத்திவரதர் தரிசனத்திற்கு 16, 17ம் தேதிகளில் விஐபிகளுக்கு அனுமதியில்லை