இதுவரை சயனக் கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இன்று முதல் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்திவரதப் பெருமாளை தரிசித்து வருகின்றனர்.
வைணவர்களால் 108 புண்ணிய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 40 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் குளத்தில் இருந்து வெளியே வந்த அத்திவரதர், இம்மாதம் 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். வெளிமாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்து விட்டு செல்கி்ன்றனர்.
தினமும் ஏராளமான வி.ஐ.பி.க்களும் வந்து தரிசிக்கின்றனர். 31ம் நாளான நேற்று, அத்திவரதர் மஞ்சள் நிற பட்டாடை உடுத்தி மலர் அலங்காரத்தில் காட்சி கொடுத்தார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலையில் காஞ்சிபுரம் வந்து, அத்திவரதரை தரிசித்தார்.
ஜூலை 1ம் தேதி முதல் நேற்று வரை 31 நாட்கள் சயனக் கோலத்தில் தரிசனம் அளித்த அத்திவரதர், இன்று (ஆகஸ்ட் 1ம் தேதி) முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் காட்சி தருகிறார். இன்று காலை 4 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர். காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டது. நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் அத்திவரதரதர் முதல் நாளான இன்று நீலநிற பட்டாடையில் தரிசனம் கொடுத்து வருகிறார்.
அத்திவரதர் நாளை முதல் நின்ற கோலத்தில் காட்சி; ஓ.பி.எஸ். தரிசனம் செய்தார்