மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் : ஸ்டாலின் சொன்னது சரி..

3 more tamilnadu ministers has gone to foreign countries

by எஸ். எம். கணபதி, Sep 5, 2019, 14:41 PM IST

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இன்று மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த மாதம் 28ம் தேதியன்று லண்டன் சென்றார். அங்கு கிங்க்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, லண்டனில் நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்த பின்பு, அமெரிக்காவுக்கு சென்றார். இதற்கிடையே, தமிழகத்தில் இருந்து அமைச்சர்கள் உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.சி.சம்பத் ஆகியோர், அமெரிக்காவுக்கு சென்று முதலமைச்சருடன் சேர்ந்து கொண்டனர்.

இதற்கு முன்னர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தோனேஷியாவுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் ரஷ்யாவுக்கும், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, மொரிசியஸ் நாட்டுக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து நாட்டுக்கும் அரசுமுறைப் பயணமாக சென்று வந்துள்ளனர்.
தற்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் இன்னும் ஊர் திரும்பவில்லை. இந்நிலையில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகிய இருவரும் இன்று(செப்.5) காலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றனர்.

சி.வி.சண்முகத்தின் அண்ணன் மகன் சமீபத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் தற்போது சிங்கப்பூரில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருப்பதால், அவரை பார்ப்பதற்காக சொந்த செலவில் சி.வி.சண்முகம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதே போல், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன், துபாய் வழியாக எகிப்து நாட்டுக்கு சென்றுள்ளார். இவரும் தனிப்பட்ட பயணமாக குடும்பத்துடன் சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக தலைவர் ஸ்டாலின் நேற்று(செப்.4) ஒரு திருமண விழாவில் பேசும் போது, எடப்பாடி பழனிச்சாமி உள்பட அமைச்சர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு சுற்றுலா போய் கொண்டிருக்கிறார்ள். எடப்பாடி அமைச்சரவை இப்போது சுற்றுலா அமைச்சரவை ஆகி விட்டது என்று கிண்டலடித்தார். இது சரியாகவே உள்ளது. காரணம், இதற்கு முன்பு கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் இப்படி ஒரே சமயத்தில் பல அமைச்சர்கள் வெளிநாடு சென்றதே இல்லை. ஓரிருவர் மட்டுமே வெளிநாடு செல்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதே போல், கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கென்று வெளிநாடுகளுக்கு சென்றதே இல்லை.

You'r reading மேலும் 3 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் : ஸ்டாலின் சொன்னது சரி.. Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை