திமுக பொதுக்குழு நவ.10ல் கூடுகிறது.. உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசனை

Dmk general council meet on 10th november

by எஸ். எம். கணபதி, Oct 31, 2019, 13:27 PM IST

திமுக பொதுக்குழு நவம்பர் 10ம் தேதி சென்னையில் கூடுகிறது. இதில், முக்கியமாக உள்ளாட்சித் தேர்தல் குறித்தும், கட்சியின் விதிகளில் திருத்தம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின், கடந்த ஆண்டு ஆக.28ம் தேதி பொறுப்பேற்றார். அவர் தலைவரான பிறகு திமுகவின் முதல் பொதுக்குழு கடந்த செப்டம்பர் 6ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. வழக்கமாக, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள மண்டபத்தில் தான் கட்சியின் பொதுக்குழு நடைபெறும். ஆனால், ஸ்டாலின் தலைமையிலான முதல் பொதுக் குழு என்பதால், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

அதன்பிறகு, விக்கிரவாண்டி, நாங்குநேரி உள்ளிட்ட இடைத்தேல் உள்ளிட்ட சில காரணங்களால் பொதுக்குழு கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. தற்போது இது நவம்பர் 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்ட அறிவிப்பில், ஏற்கனவே செப்.6ம் தேதி நடைபெறவிருந்து ஒத்திவைக்கப்பட்ட திமுக பொதுக்குழு கூட்டம் நவம்பர்10ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் உள்ள அரங்கத்தில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.

இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.
கூட்டத்தில், கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சித் தேர்தல், கட்சியின் சட்டதிட்ட திருத்தம், தணிக்கைக் குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தனது வயது முதிர்ச்சியின் காரணமாக பொறுப்பில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்திருந்தார்.

ஆனால், கருணாநிதி கடைசி வரை தலைவராக இருந்தது போல், அன்பழகனும் கடைசி வரை பொதுச் செயலாளராக இருக்க வேண்டுமென்று மூத்த நிர்வாகிகள் விரும்புகின்றனர். எனவே, பொதுச் செயலாளரின் பணிகளை மட்டும் வேறொருவரிடம் ஒப்படைக்க பொதுக்குழுவில் முடிவெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி, வேட்பாளர்கள் தேர்வு குறித்தும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது.

You'r reading திமுக பொதுக்குழு நவ.10ல் கூடுகிறது.. உள்ளாட்சி தேர்தல் பற்றி ஆலோசனை Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை