ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது போலீஸ் போட்ட பொய் வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்.

by எஸ். எம். கணபதி, Sep 8, 2020, 14:24 PM IST

சாத்தான்குளம் தந்தை மகன் மீது போலீசார் பொய் வழக்குப் பதிவு செய்திருந்ததாக சி.பி.ஐ. தெரிவித்திருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்திய ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்குத் தந்தை-மகன் இருவரும் இறந்து விட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, இரவு முழுக்க கொடூரமாகத் தாக்கியதால்தான் இருவரும் இறந்தனர் என்று குற்றம்சாட்டி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தற்போது சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இந்த கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சப்இன்ஸ்பெக்டர்கள் உள்படப் பல போலீசார் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன், முத்து ராஜ், பிரான்சிஸ் ஆகிய போலீசாரின் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, சி.பி.ஐ. பதில் மனுவைத் தாக்கல் செய்தது.

அதில், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் மீது காவல் துறையினர் திட்டமிட்டுப் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது வரை 45 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டிருப்பதாகவும், ஸ்ரீதர் கவனத்திற்கு வராமல் தந்தை,மகன் மீது தாக்குதல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டிருக்கிறது.இதையடுத்து, விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இன்ஸ்பெக்டரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.


More Crime News