வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். தந்தையை கொன்றதால் நண்பர்களுடன் சேர்ந்து பழி வாங்கியதாக கைதானவர்களில் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.வேலூர் புதிய மாநகராட்சி அலுவலகம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே நேற்று முன்தினம் இரவு
கொணவட்டம் அம்பேத்கர்நகரை சேர்ந்த சாலமன் (வயது 30) என்ற வாலிபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை மர்ம நபர்கள் ஆட்டோவில் கடத்தி கொலைசெய்து
உடலை வீசிச்சென்றனர்.
இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், கொலை செய்யப்பட்ட சாலமன் அதே பகுதியில் தள்ளுவண்டியில் புட்டு
விற்பனை செய்து வந்ததும், கடந்த 2018-ம் ஆண்டு வேலூர் ஆர். எஸ்.நகரை சேர்ந்த முனியனை கொலை செய்த வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
அதையடுத்து போலீசார் முனியன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையில்
ஈடுபட்டனர்.இதுதொடர்பாக போலீசார் முனியனின் மகன் விஜயை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து வேலூர் புதிய மீன் மார்க்கெட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சாலமனை ஆட்டோவில் கடத்தியதாகவும், தந்தையை
கொலை செய்ததற்கு பழிக்கு பழி வாங்குவதற்காக சாலமனை ஆட்டோவில் வைத்து சரமாரியாக கத்தியால் வெட்டி கொலைசெய்து உடலை ஆள்நடமாட்டம் இல்லாத மருத்துவமனையின் அருகே வீசி விட்டு சென்றதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து விஜய் (26) மற்றும் அவருடைய நண்பர்கள் விக்னேஷ் (25), பிரபாகரன் (25), பிரவீன்குமார் (25), மணிகண்டன் (26), அய்யப்பன் (25) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களைகோர்ட்டில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர்.