`நேரடியாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்... 2 வரியால் உதயநிதிக்கு வந்த சிக்கல்!

by Sasitharan, Apr 7, 2021, 20:48 PM IST

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பிரசாரத்தில் பேசியதாக எழுந்த புகார் தொடர்பாக இன்று மாலைக்குள் விளக்கம் அளிக்க அவருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார் உதயநிதி. அவரது பிரசாரங்கள் புதுவகையாகவும் இருந்தன. எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து விமர்சிக்கும் வகையில், பிரசாரத்திற்கு செங்கல்லை கொண்டுவந்து, எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் இன்னும் தொடங்கப்படாததை சுட்டிக்காட்டினார். அந்த வகையில், தாராபுரத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜேட்லி ஆகியோரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என பேசியதாக புகார்கள் எழுந்தன. மேலும் இது சர்ச்சை ஏற்படுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு சுஷ்மா மற்றும் அருண் ஜெட்லியின் வாரிசுகள் பதிலடி கொடுத்திருந்தனர்.

இது உண்மைக்கு மாறான தகவல் என்று கூறி, சுஷ்மா ஸ்வராஜின் மகள் ட்விட்டர் மூலம் மறுப்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் பாஜக சார்பில் ஏப்ரல் 2 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து உதயநிதி ஸ்டாலினுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் ஏப்ரல் 7ஆம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றே உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், ``தாராபுரத்தில் நான் பேசிய வெறும் 2 வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளித்துள்ளனர். அவர்களின் குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இந்த பதிலை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும். நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார்.

You'r reading `நேரடியாக விளக்கம் அளிக்க அவகாசம் வேண்டும்... 2 வரியால் உதயநிதிக்கு வந்த சிக்கல்! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை