முன்னாள் முதல்வர் கருணாநிதியின் செயல்பாடுகள் தொடர்பாக அவரின் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு பகிர்ந்த பதிவு தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது. அது உங்களின் பார்வைக்கு,
தங்கம் தென்னரசு அதில், ``தப்புன்னு ஒண்ணு இருந்தா அது முதல்ல தலைவர் கலைஞர் கண்ணுலதான் படும்!
அது சாதாரண ஒற்றுப் பிழையாக இருந்தாலும் சரி; அல்லது, கொள்கை சார்ந்த பெரிய விஷயமாகவே இருந்தாலும் சரி.
ஒருமுறை தமிழகச் சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை மீதான விவாதம். அமைச்சர் என்ற வகையில் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பினைத் தாக்கல் செய்திருந்தேன். விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதம் முடிந்து அவரது அறைக்குச் சென்றிருந்த முதல்வர் திடீரென சபைக்குத் திரும்பி வந்து உட்கார்ந்தார். சிறிது நேரம் விவாதத்தைக் கவனித்தபின், மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த கொள்கை விளக்கக் குறிப்பினை எடுத்து அதன் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தார்.
அவரது இருக்கைக்குப் பின்னால் என்னுடைய இருக்கை என்பதால் என்னால் அவரைக் கவனிக்க முடிந்தது. ஓரிரு நிமிடங்களிலேயே கையிலிருந்த புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு, மெதுவாகப் பின்னால் திரும்பி என்னை வரச்சொல்லி சைகை செய்தார். பக்கத்தில் போனேன்.
“ இந்த கொள்கை விளக்கக் குறிப்பில் எந்த இடத்தில சமச்சீர் கல்வி அப்டின்னு வார்த்தை வந்திருக்கு? காட்டு பார்க்கலாம்!”
“இல்லீங்க அய்யா..கேபினட்ல இருக்கிறதால அதைப்பத்தி என் பதிலுரைல சொல்லிக்கலாம்னு நினைச்சு சேர்க்கல”
“ நீ பதிலுரைல சொல்லலாம்யா..அதுவா முக்கியம். நம்ம அரசாங்கத்தோட முக்கியமான ஒரு கல்விக் கொள்கை பத்தி கொள்கை விளக்கக் குறிப்பில் சொல்லாமா எங்க சொல்றது?”
அமைதியாய் நின்றிருந்தேன்.
எதிர் வரிசையில் எல்லோர் கண்களும் எங்கள் மீதே படிந்திருந்தது. சபையில் குனிந்து முதல்வரும், அமைச்சரும் அப்படி என்ன தான் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்று!
“ யாராவது எதிர்க்கட்சில பேசினவங்க இதை ஏன் குறிப்பிடலன்னு கேட்டாங்களா?”
“ இல்லீங்க அய்யா..இதுவரையாரும் கேக்கல”
“சரி. யாராவது ஏதாவது கேட்டா நான் பதில் சொல்லிக்கிறேன். நீ பேசாமலிரு””
ஆனால், கடைசிவரை யாரும் அந்தக் கேள்வியைக் கேட்கவேயில்லை. சபாநாயகர் என்னை இறுதியாகப் பதிலுரைக்காக அழைத்தார்.
முதல்வர் என்னை லேசாகத் திரும்பிப் பார்த்தார். எழுந்து நின்றேன். எங்கள் இருவருக்கு மட்டுமே பொருள் புரிந்த ஒரு புன்னகையை மெல்ல வீசிவிட்டுக் கிளம்பினார்.
பிழையைச் சுட்டிக்காட்டித் திருத்தியதோடு மட்டுமல்ல; தன் கீழே பணிபுரியும் உடன்பிறப்புக்களில் ஒருவனுக்குச் சபையிலே ஒரு சங்கடம் நேர்ந்து விடுமாயின், அவனுக்காகத் தானே அதை எதிர்கொள்ளவும் தயாராயிருந்தார்" என்று பதிவிட்டுள்ளார்.