பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று ஒட்டப்பட்ட “ஸ்டிக்கர்” – பெயர் பலகைக்கு போலீஸ் பாதுகாப்பு

by Ari, Apr 17, 2021, 07:25 AM IST

சென்னை சென்ட்ரல் அருகே பெயர் மாற்றம் செய்யப்பட்ட பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் “ஸ்டிக்கர்” ஒட்டியதால் பெயர் பலகைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடந்த 1979-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர், தந்தை பெரியாருக்கு புகழ் சேர்க்கும் வகையில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு அவருடைய பெயரை சூட்டினார். இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை என்று பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் கடந்த செவ்வாய்கிழமை நெடுஞ்சாலைத்துறை சார்பில் மாநகராட்சி ரிப்பன் மாளிகை, சென்டிரல் ஆகிய இடங்களில் புதிய பெயர் பலகைகள் வைக்கப்பட்டது. இதில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை பெயருக்கு பதிலாக “கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க்” சாலை என்று பெயர் மாற்றப்பட்டு இருந்தது.

இதையடுத்து, பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. பெரியார் சாலை பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னணியில் பா.ஜ.க. தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் “கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க்” சாலை என்று எழுதப்பட்டிருந்த பெயர் பலகை மீது கறுப்பு மை பூசி அழித்தனர்.

இந்தநிலையில் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை மற்றும் சென்டிரல் அருகே உள்ள பெயர் பலகையில் பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று நேற்று “ஸ்டிக்கர்” ஒட்டப்பட்டிருந்தது. எதிர்ப்புகளை தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் ”ஸ்டிக்கர்” ஒட்டப்பட்டிருக்கலாம் என்று முதலில் கருதப்பட்டது. ஆனால் அதனை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்தான் இரவோடு, இரவாக பெரியார் ஈ.வெ.ரா. சாலை என்று “ஸ்டிக்கர்” ஒட்டியது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்களை தொடர்ந்து அந்த பெயர் பலகை அருகே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

You'r reading பெரியார் ஈ.வெ.ரா.சாலை என்று ஒட்டப்பட்ட “ஸ்டிக்கர்” – பெயர் பலகைக்கு போலீஸ் பாதுகாப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை