கொங்கு மண்டலத்தை பொறுத்தவரை எப்போதும் அதிமுகவின் கை தான் மேலோங்கி நிற்கிறது. அந்த வகையில் இந்த தேர்தலிலும் அதிமுகவே அதிக இடங்களை வென்றிருக்கிறது.
2021ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. 158 இடங்களை பிடித்து ஸ்டாலின் முதலமைச்சர் பதவியில் அமர இருக்கிறது. இதன் மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் திமுக ஆட்சி அமையவிருக்கிறது. இந்நிலையில், திமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் பெரும் அடி விழுந்துள்ளது. எப்போதும் போல, கொங்கு மண்டலத்தை வாரிச்சுருட்டியிருக்கிறது அதிமுக. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே கொங்கு மண்டலத்தில் அதிமுக செல்வாக்குடன் திகழ்ந்து வருகிறது.
அதிலும், கோவை மாவட்டம் அதிமுகவை தீவிரமாக ஆதரிக்கும் மாவட்டமாகவே இருந்தது. கால் நூற்றாண்டு காலமாக நடந்த அனைத்து சட்டசபை தேர்தல்களிலும், அதிமுகவே அதிகளவு தொகுதிகளில் வென்றுள்ளது. ஆனால் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் கொங்கு மண்டலத்தில் அதிமுக முன்போல வெல்வது கடினம் எனக் கூறப்பட்டது. ஆனால் அதையெல்லாம் முறியடித்து கோவையில் உள்ள அனைத்து தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது.
கோவை மட்டுமின்றி, திருப்பூர் மாவட்டத்தில் எட்டு தொகுதிகளில், 5 தொகுதிகளில் அதிமுக வென்றுள்ளது. ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் பெரும்பான்மையான தொகுதிகளில் அதிமுகவின் ஆதிக்கமே நிறைந்திருக்கிறது.
இதனை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது எம்ஜிஆர் காலத்திலிருந்த அதே மவுசு இன்னும் அதிமுகவுக்கு கொங்கு மண்டலத்தில் இருக்கிறது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அதேநேரத்தில் வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களில் திமுக செல்வாக்கு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.