டிடிவி தினகரன் மட்டும் என்று இல்லாமல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. டிடிவி ஏன் கோவில்பட்டிக்கு வந்தார்? அங்கு கணிசமான முக்குலத்தோர் வாக்குகள் உண்டு என்பதாலும், அந்த வாக்குகள் இருக்கும் பகுதியில் ஒன்றியத்தை அந்தக் கட்சி கைப்பற்றி இருந்தது என்பதாலும் தான்.
ஆனால் இந்த கணக்கீடு அவருக்கே பின்விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. தினகரன் கோவில்பட்டிக்கு வரவும், அவரை முக்குலத்து ஆள் என்று பார்த்த பிற சாதிகள், கடம்பூர் பக்கம் திரும்பியிருக்கின்றன. ஒரு பொது அடையாளத்துடன் இயங்கவேண்டிய தலைமை ஆட்கள், தங்களது தொகுதியை சாதியக் கணக்கோடு தெரிவு செய்கையில் அது எதிர்மறையாகப் போகிறது என்பதற்கு இந்த தோல்வி உதாரணம்.
ஒட்டுமொத்தமாகவே அமமுகவை ஒரு சாதியுடன் பிணைத்து புரிந்து கொள்ளும் மக்கள், எதிரணியுடன் வலுவாக சாய்கிறார்கள். இந்தமுறை தேமுதிக கடும் சரிவை சந்தித்ததற்குக் காரணம் அமமுகவுடனான அதன் கூட்டணிதான். நாயுடு சாதி அடையாளம் என்பதெல்லாம் விஜயகாந்துக்கு பிற்காலத்தில் வந்ததுதான். ஆனால் அவர் வடமாவட்டத்தில் தனித்து நின்று ஜெயித்ததன் வழியாக ஒரு பொது அடையாளத்தை எட்டியிருந்தார். இந்த அமமுக கூட்டணி அதை ஆவியாக்கி விட்டிருக்கிறது போல.
அமமுக பரிமாளிக்காததற்கு இன்னொரு காரணம் தலித்துகள் அவர்களை நிராகரிக்கிறார்கள் என்பது. தலித்துகளின் ஏற்பு தமிழக தேர்தல் அரசியலில் முக்கியமான அலகு. எல்லோரும் எம்ஜியாரை அதில் சிறப்பாக சொல்வோம். ஆனால் கருணாநிதியும் தலித்துகள் மத்தியில் ஆழமாக ஊடுருவிய தலைவரே.
அமமுகவின் எதிர்காலத்தைப் பொறுத்தவரை சசிகலா மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் இரண்டாம் பட்சம்தான். சாதி எல்லாவற்றையும் மீறிய சக்தியாக இருக்கிறது என்பது கவனிக்கப்பட.வேண்டியது.