முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற உத்தரவிட்டதற்கு அன்புமணி, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், "நெடுஞ்சாலை துறையில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்த புகார் குறித்து விசாரித்த ஆளுநரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இந்நிலையைல் சென்னை உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை வரவேற்கிறோம்"
"தமிழகத்திற்கு மிகப் பெரிய அவமானம் இது. பதவியில் உள்ள ஒரு முதலமைச்சரை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் சொல்வதெல்லாம் மேலும் மேலும் அவமானம். நெடுஞ்சாலை துறை மட்டுமல்ல அனைத்து துறைகளிலும் ஊழல் குவிந்து உள்ளது" என அன்புமணி கூறினார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் பேசிய போது, ஊழல் எந்த விதத்திலும் ஓப்பு கொள்ள முடியாத ஒன்று. முதலமைச்ச்ர் தரப்பு சட்ட ரீதியாக எப்படி அணுகுகிறார்கள் என்பதை பார்க்கவேண்டும்.
யார்மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் அது விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் குற்றச்சாட்டு வந்ததினால் பதவி விலக வேண்டும் என்று சில பேர் சொல்வதை ஏற்க முடியாது" என்று தெரிவித்தார்.