சென்னை போன்ற பெருநகரங்களில் முக்கிய கட்சிகள், தங்களின் தலைவர் பிறந்த நாள், பொதுக்குழு, செயற்குழு என்று ஏதாவது ஒரு நிகழ்வுகளுக்கு பேனர், பிளக்ஸ் வைத்து பொதுமக்களை திக்குமுக்காட வைத்துவிடுவது வழக்கமான ஒன்றாகிவருகிறது.
இதன் ஒரு பகுதியாக சென்னை வானகரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதியை வரவேற்று வழிநெடுகே சாலை ஓரம் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதை சுட்டிக் காட்டிய நெட்டிசன் ஒருவர் எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும்கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள்.
ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியிருந்தார்.
இந்நிலையில், இதற்கு தனது டுவிட்டர் பக்கத்தில் பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், மீண்டும் இதுபோன்ற தவறு மீண்டும் நடக்காது என உறுதியளித்துள்ளார்.
இது முதல்முறை அல்ல இதேபோல கடந்த செப்டம்பர் மாதம் திமுக தலைவர் அருகே உதயநிதி புகைப்படம் இடம் பெற்றிருந்ததை விமர்சித்து திமுக தொண்டர் எழுப்பிய கேள்விக்கு, அப்போதும் ,‘தவறு.. மீண்டும் நடக்காது..’ என்று உதயநிதி பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.