டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் திருப்பதிக்கு வாங்க : தேவஸ்தானம் வேண்டுகோள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் வரவேண்டும் செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி கேட்டுக்கொண்டுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி 25ஆம் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணிக்கு மார்கழி மாத திருப்பாவை சேவையுடன் சுவாமி துயில் எழுப்பும் வைபவம் நடக்க உள்ளது. தொடர்ந்து வாராந்திர அபிஷேக சேவை பக்தர்கள் இன்றி நடத்தப்பட உள்ளது. பின்னர் அர்ச்சனை செய்யப்பட்டு 4.30 மணிக்குக் கோவிலில் உள்ள சொர்க்கவாசல் எனும் பரமபதவாசல் ஜீயர்கள் முன்னிலையில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழுக்க திறக்கப்பட உள்ளது. அதன் பிறகு முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு 9 மணிக்கு மேல் ஆன்லைனில் ரூ 300 டிக்கெட் பெற்ற பக்தர்களும், இலவச தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

இந்நிலையில் சொர்க்கவாசல் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்குச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து செயல் அதிகாரி ஜவகர் ரெட்டி அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் ஜவகர் ரெட்டி கூறியதாவது : ரூ. 300 சிறப்புத் தரிசன டிக்கெட்கள் ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்கள் என ஆன்லைனில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. திருப்பதியை சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு நாளொன்றுக்கு 10 ஆயிரம் டிக்கெட்கள் என 10 நாட்களுக்கு 1 லட்சம் டிக்கெட்கள் 24 ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது. எனவே டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் சொர்க்கவாசல் வழியாகச் சுவாமி தரிசனத்துக்கு வர வேண்டும். மற்றவர்கள் வரக்கூடாது. கொரோனா நிபந்தனை வழிகாட்டி நடைமுறைகளுடன் சுவாமி தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தேவஸ்தான நிர்வாகத்திற்குப் பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

You'r reading டிக்கெட் உள்ளவர்கள் மட்டும் திருப்பதிக்கு வாங்க : தேவஸ்தானம் வேண்டுகோள் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழா நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்