புல்லரிக்க வைக்கும் திரைக்கதை! ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம்

rajamouli next film updates

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய கற்பனைக் கதையைதான் அடுத்து திரைப்படமாக்கவுள்ளதாக கூறியிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி. 

 

 

ராஜமௌலி `ஆர்.ஆர்.ஆர்' என்னும் படத்தை இயக்கப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.  தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர்-ஐ வைத்து இத்திரைப்படத்தை எடுக்க உள்ளதாக அறிவித்தார். ஆர்.ஆர்.ஆர் எதைப் பற்றிய கதை, பிரமாண்ட படமா, எந்த காலக்கட்டத்தில் நடக்கும் கதைகளம் என பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மனதில் உருவானது. அவற்றிக்கு பதில் அளிக்கும் விதமாக ராஜமெளலி இன்று ஹைதராபாத்தில் பேட்டியளித்தார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தயாரிப்பாளர் டிவிவி தானய்யா, ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ராஜமெளலி பேசியதாவது, "1898-ல் பிறந்த அல்லுரி சீதராம ராஜூ மற்றும் 1901ல் பிறந்த கோமரம் பீம், ஆகிய இருவருமே ஒரே குடும்ப சூழலில் பிறந்து வளர்ந்தவர்கள். இளம் வயதிலேயே வீட்டை விட்டு வெளியேறினர்.  அவர்கள் மீண்டும் வீடு திரும்பி வந்து, பழங்குடி மக்களுக்கான நலனுக்காகவும், சுதந்திரத்துக்காகவும் போராடினார்கள். அதுவரை எங்கிருந்தார்கள் என்று யாருக்குமே தெரியாது. கொரில்லா பாணி தாக்குதல், போலீஸின் ஆயுதங்களைக் கைப்பற்றுவது, மக்களைத் திரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். இறுதியில் இருவருமே ஆங்கிலேயர்களால் கொல்லப்பட்டனர்.

இவர்கள்  இருவரின் சரித்திரத்தைப் படிக்கும் போது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஒரே காலகட்டத்தில் பிறந்து திடீரென காணமல் போய், மீண்டும் வந்து போராடுவது போன்றவை என்னை ஆச்சரியப்படுத்தின. இவர்களை பற்றிதான் கதையை அமைத்திருக்கிறேன்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள், ஒருவரை ஒருவர் சந்திக்காதவர்கள், வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சமயத்தில், ஒருவருக்கு மற்றொருவர் சுதந்திரப் போராட்டத்துக்கான உந்துதலாய் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்,  அவர்களின் போராட்டத்துக்கு அவர்களின் நட்பே காரணமாக இருந்திருந்தால் எப்படியிருக்கும், என்ற என் கற்பனைய்யை படமாக்கயிருக்கிறேன்.

அதாவது. இரண்டு நிஜ சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றிய என் கற்பனைக் கதை. இதை மிகப்பிரம்மாண்டமாக எடுக்கிறோம்" என்று தெரிவித்தார்.

படத்தின் பட்ஜெட்  கிட்டத்தட்ட ரூ.350 கோடி முதல் ரூ.400 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்தப் படம் 2020, ஜூலை 30 இல் தெலுங்கு, தமிழ், இந்தி உட்பட பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

You'r reading புல்லரிக்க வைக்கும் திரைக்கதை! ராஜமெளலியின் அடுத்த பிரமாண்டம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - புதுப்பொலிவுடன் மீண்டும் திரைக்கு வரும் ரஜினியின் ‘தங்கமகன்’

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்