சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்து: மதுராந்தகம் அருகே 5 பேர் பலி

மதுராந்தகம்: அரசு பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியதில் கார் ஏரியில் பாய்ந்து, அதில் இருந்த 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம், செம்பாட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரிக்கண்ணு. இவர், சென்னையில் உள்ள உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது உறவினர்களான தமிழ்செல்வி(60), தினேஷ்(29), ராதிகா(30), பிரபாவதி(40), சிறுவன் இளம்பரிதி(6) உள்பட எட்டு பேருடன் காரில் சென்றார்.

நிகழ்ச்சி முடிந்ததும், அவர்கள் அனைவரும் நேற்று இரவு புதுக்கோட்டை நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தனர். மதுராந்தகம் அருகே அச்சிறுப்பாக்கத்தை அடுத்த தொழப்பேடு அருகே ஆத்தூர் என்ற இடத்தில் கார் வந்தபோது திடீரென டீசல் காலியானது. இதனால், காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கார் ஓட்டுனர் டீசல் வாங்கி வந்தார்.


அப்போது, திடீரென அரசு பேருந்து ஒன்று நின்றுக் கொண்டிருந்த கார் மீது மோதியது. இதில், கட்டுப்பாட்டை இழந்த கார் சில அடி தூரம் தானாக சென்று அங்கிருந்த ஏரிக்கரையில் தலைக்குப்புற கவிழந்தது.

சேறும் சகதியுமாக இருந்த ஏரிக்கரையில் கார் சிக்கியதால், அதற்குள் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.  இவர்களின் அலறல் சத்தம் கேட்டு, சுங்கச்சாவடி ஊழியர்கள் விரைந்து சேற்றில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். இதில், 5 பேர் பலியாயினர். மேலும் மூன்று பேரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள மாவட்ட போலீசார், விபத்துக்கு காரணமான பேருந்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You'r reading சாலையோரம் நின்றுக் கொண்டிருந்த கார் மீது பேருந்து மோதி விபத்து: மதுராந்தகம் அருகே 5 பேர் பலி Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தந்தை இல்லாத 251 பெண்களுக்கு பிரம்மாண்ட திருமணம்: குஜராத் தொழிலதிபர் அசத்தல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்