மதிய உணவு திட்டம்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம்

மதிய உணவு திட்டம் குறித்து தகவல் அளிக்காத தமிழகம் உள்பட மூன்று மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால், இங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவு தரமானதாக இல்லை என்றும் இதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்படுகிறது என்றும் புகார்கள் எழும்புகின்றன.

அந்த வகையில், தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு ஒன்று தாக்கல் செய்தது. அதில், “நாடு முழுவதும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. ஆனால், முறையாக கண்காணிப்பு இல்லாததால், உணவு, நச்சுத்தன்மையாக மாறுவதுடன் பல்வேறு உடல்நல கோளாறுகள் ஏற்படுகின்றன” என அதில் குறிப்பிட்டருந்தது.

இந்த மனுவை கடந்த ஆண்டு மார்ச் 23ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், மதிய உணவு திட்டத்தால் பலன் அடையும் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட தகவல்களை ஒவ்வொரு மாநிலமும் 3 மாதங்களுக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதன்பிறகு, பல்வேறு மாநிலங்கள் தகவல்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தன. ஆனால், தமிழகம் உள்பட மூன்று மாநிலங்கள் இதுவரை தாக்கல் செய்யவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தாஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, “தங்கள் உத்தரவுப்படி மதிய உணவு திட்ட பயனாளிகளின் தகவல்களை வெளியிடாத தமிழகம், ஜார்கண்ட், உத்தரகாண்ட் உள்ளிட்ட 3 மாநிலங்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை இன்னும் 4 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றம் சட்ட பணிகள் ஆணையகத்திடம் செலுத்த வேண்டும்” என்றும் உத்தரவிட்டனர்.

You'r reading மதிய உணவு திட்டம்: தமிழகம் உள்பட 3 மாநிலங்களுக்கு அபராதம் விதித்தது உச்சநீதிமன்றம் Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சரணடைந்தனர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்