பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கால்தடம் பதித்த மும்பை! மிடில் ஆர்டர் சொதப்பலால் தோல்வி!

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தையும், பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.முதலில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து, பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. கோலியும் நாங்கள் டாஸ் வென்றிருந்தால் பேட்டிங் தான் செய்திருப்போம் என ஆருடம் செய்தார்.

பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் சரிவர ஆடாததால் நேற்றைய போட்டியில் கழட்டி விடப்பட்டார். அவருக்குப் பதிலாக ஜோஷ் ஃபிலிப் மாற்று வீரராகக் களமிறக்கப்பட்டார்.

படிக்கல் மற்றும் ஃபிலிப் இருவரும் ஆட்டத்தைத் தொடங்கினர். மும்பை அணியின் பந்து வீச்சை இருவரும் இலாவகமாக விளாசித் தள்ளினர். சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்த ஃபிலிப் 33 ரன்களில், டி-காக் ஸ்டெம் ஹிட் செய்ய பெவிலியன் திரும்பினார். 8 ஓவர் முடிவில் 71-1 என்ற சிறப்பான நிலையில் கோலி, படிக்கல் உடன் கைகோர்த்தார்.

ஒருகட்டத்தில் பெங்களூர் அணி பெரிய இலக்கை நிர்ணயிக்க வாய்ப்பும் இருந்தது. ஆனால் கோலி தொடக்கம் முதலே தடுமாறி ரன்களை சேர்த்து வந்தார். 12 ஓவரை வீசிய பும்ரா, கோலிக்கு ஷார்ட் பால் வீச கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களம் கண்ட டிவில்லியர்ஸ் இந்த முறையும் அணியை வேறு கட்டத்திற்கு எடுத்துச் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பொல்லார்ட் வீசிய புல் டாஸ் பந்தில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். பெங்களூர் அணியின் ரன்ரேட் குறையத் தொடங்கியது.

ஆனால் மறுபுறம் தனி ஆளாகப் போராடிக் கொண்டிருந்த படிக்கல் 45 பந்தில் 12 பவுண்டரி, 1 சிக்சர் என 74 ரன்களை விளாசி அசத்தினார்.பின்னர் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாக பெங்களூர் அணி இருபது ஓவர் முடிவில் 164/6 ரன்களை எடுத்தது.பெங்களூர் அணியை இந்த குறைவான ரன்களில் சுருக்கிய பெருமை பும்ராவையே சாரும். நேற்றைய போட்டியில் பந்து வீசிய பும்ரா (4-1-14-3) 4 ஓவரில் 14 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இருபது ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது மும்பை அணி. ஓவருக்கு 8.25 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் தொடக்க இணையான டி-காக் மற்றும் இஷான் கிஷான் நிதானமாக விளையாடினர்.ஆனால் பவர்பிளேயின் கடைசி ஓவரை வீசிய சிராஜ் 18 ரன்கள் எடுத்திருந்த டி- காக் விக்கெட்டை வீழ்த்தி மும்பை அணிக்கு அதிர்ச்சியளித்தார். அடுத்த கிஷான் உடன் சூர்ய குமார் யாதவ் கைகோர்க்க ஆட்டத்தின் போக்கு மாற தொடங்கியது.

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்து கொண்டே இருக்க மறுபுறம் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் சூர்ய குமார் யாதவ்.சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இவருக்கு இடமளிக்க படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணி தேர்வர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நேற்றைய போட்டியில் சிறப்பாகச் செயல்பட்டு அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

பெங்களூர் அணியின் சார்பில் பந்து வீசிய சஹல் மற்றும் சிராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.அதிரடியாக விளையாடிய சூர்ய குமார் யாதவ் 43 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சர் என 79 ரன்களை விளாசி ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார். இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது மும்பை அணி.

You'r reading பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கால்தடம் பதித்த மும்பை! மிடில் ஆர்டர் சொதப்பலால் தோல்வி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - சார்ஜ் போட்டு கொண்டே போன் பேசியதால் நடந்த விபரீதம்..! மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்