அரசு அறிவித்துள்ள ஸ்கூட்டியைப் பெற என்ன செய்யவேண்டும்?

பெண்கள் முன்னேற்றத்திற்காக, தமிழக அரசு அறிவித்துள்ள மானிய விலை ஸ்கூட்டியை பெற செய்யவேண்டியவை குறித்து சேலம் கலெக்டர் ரோகினி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, சேலம் கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

மாவட்டத்தில், பெண்கள் முன்னேற்றத்துக்கு, 2017 - 18-ல் இருந்து, ஜெயலலிதா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வாகன தொகையில் அதிகபட்ச மானியம், 50 சதவீத தொகை அல்லது, 25 ஆயிரம் ரூபாய், அதில், எது குறைவோ, அதன் அடிப்படையில் மானியம் உண்டு.
ஊரக பகுதியினர், அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம், நகர்ப் புறங்களை சேர்ந்தவர்கள் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில், வரும், 22 (ஜனவரி) முதல் பிப்ரவரி, 5 வரை விண்ணப்பத்தை நேரில் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்து, அதே அலுவலகத்தில் பிப்ரவரி, 5 மாலை, 5:00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும். அமைப்பு சார்ந்த, அமைப்பு சாரா துறை தொழிலாளர்களாக பதிவு செய்திருக்க வேண்டும். தனியார் உள்ளிட்ட இதர அனைத்து நிறுவனங்களில் பணிபுரிவோர் விண்ணப்பிக்கலாம். வயது, 18 முதல், 40-க்குள் இருக்க வேண்டும். குறிப்பாக, வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பதோடு, பயனாளி ஆண்டு வருமானம், 2.5 லட்சம் ரூபாய்க்குள் இருப்பது அவசியம்.
ஒரு குடும்பத்தில், ஒருவருக்கு மட்டும் மானியம். தொலை தூர, மலைப்பகுதியில் பணிபுரிவோர், குடும்ப தலைவி, கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், திருமணமாகாத, 35 வயது பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு முன்னுரிமை. ஆதார் அட்டை, உரிமம், வீட்டு மின் கட்டண ரசீது, எட்டு முதல், 10-ம் வகுப்பு வரை கல்வி சான்று, மார்பளவு புகைப்படம், ஜாதிச்சான்று உள்ளிட்ட ஆவண நகல்களை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். தகவலுக்கு, 0427 - 2411552 எனும் தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

You'r reading அரசு அறிவித்துள்ள ஸ்கூட்டியைப் பெற என்ன செய்யவேண்டும்? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தி வரும் 22ம் தேதி தமிழகம் முழுவதும் சிபிஐ(எம்) கண்டனக் குரல்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்