அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் எப்போது?

கேப்டன் இல்லாத கப்பல் போல் 18 மாதங்களுக்கு மேலாக பயணித்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த ஆண்டாவது கட்சிக்கு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பதுதான் அக் கட்சியினரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ராகுல் காந்தி 2019 தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்தார். அதன் பின் சோனியா காந்தியை இடைக்கால தலைவராக கட்சியின் காரிய கமிட்டி ஏற்றுக் கொண்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் கட்சிக்கு முழு நேர தலைவர் இல்லை. காங்கிரஸ் காரிய கமிட்டி இந்த ஆண்டு ஜனவரி 22 ல் கூடியது. அதில் நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்கள் முடிந்த பிறகு கட்சித் தலைவருக்கான தேர்தலில் வைத்துக்கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அப்படி தேர்தல் நடக்கும் பட்சத்தில் ராகுல் காந்தி மீண்டும் கட்சியின் தலைவராக வருவாரா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியில் ஏழு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கடந்த 2017ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. கடந்த 2010ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் 83வது திட்டக்கூட்டம் புராரியில் நடந்தது. பொது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சியில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கட்சி கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. அதற்கு முன் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறையே தேர்தல் என்ற விதி இருந்தது. கட்சி தலைவரின் பணிக்காலம் மூன்றிலிருந்து ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. 2015ல் நடத்த வேண்டிய தேர்தல் 2017ல் தான் நடத்தப்பட்டது. பெரும்பாலும், தேர்தல் தவிர்க்கப்பட்டு, கட்சியின் அனைத்து மட்டங்களிலும் ஒரு மனதாக வே தலைவர்களும் குழுக்களும் நியமனம் செய்யப்பட்டது. ராகுலை தேர்ந்தெடுக்கும் போது கூட, அவருக்கு போட்டியாளர் யாருமே இல்லை. எனவே போட்டியின்றி அவர் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை கடந்த 40 ஆண்டுகளில் இரு முறை மட்டுமே தேர்தல் நடத்தப்பட்டிருக்கிறது. 2000ம் ஆண்டில் சோனியா காந்தியை எதிர்த்து ஜிதேந்திர பிரசாதா போட்டியிட்டார்.

அதில் சோனியா வெற்றி பெற்றார். 1997ல் நடந்த தேர்தலில் சீதாராம் கேஸரி அதிக வாக்குகள் பெற்று தலைவராகத் தேர்வானார். சரத்பவார் மற்றும் ராஜேஷ் பைலட் ஆகியோர் இந்த போட்டியில் தோல்வி அடைந்தனர். 2000ம் ஆண்டு முதலே சோனியாவும் ராகுலும் போட்டியாளார்களை எதிர்கொள்ளவில்லை. காங்கிரஸ் கட்சியின் விதிகளின்படி தலைவர்களின் மரணம் அல்லது ராஜினாமாவின் போது கட்சியில் தேர்தல் மூலம் தலைவரை தேர்வு செய்வது நிலுவையில் உள்ள வரை கட்சியின் மிக மூத்த பொதுச்செயலாளர், தலைவராக பொறுப்பு வகிப்பார். ராகுல் காந்தியின் ராஜினாமாவிற்கு பிறகு காரிய கமிட்டி சோனியாவை இடைக்கால தலைவராக நியமித்துள்ளது. கட்சி விதிகளின்படி வரும் 2022ல் அடுத்த தேர்தல் நடத்தப்பட வேண்டும். மீதமுள்ள காலத்திற்கு ஒரு தலைவர் நியமிக்கப்பட வேண்டும். இப்போது தேர்தல் நடந்தால் புதிய தலைவர் வெறும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகிப்பார். பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்பட்ட தலைவர் மற்றும் கட்சி தலைவர்கள் மூலம் புதிய தலைவரை அகில இந்திய கமிட்டியே தேர்வு செய்யலாம்.

ஆனாலும் காங்கிரஸ் அரசியல் அமைப்பின் படி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி என்பது ஒற்றை வாக்களிக்கும் முறைப்படி தங்களுக்குள் தேர்வு செய்யப்படும் மாநில காங்கிரஸ் உறுப்பினர்களில் 8 பேரில் ஒருவரை கொண்டுள்ளது. சண்டிகர், அந்தமான் நிக்கோபர், தாத்ரா நாகர் ஹவேலி, தாம் அண்ட் டையூ, லட்சத்தீவுகளில் இருந்து தலா 4 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாடாளுமன்றத்தில் உள்ள கட்சி தலைவர், சட்டமன்றங்களில் உள்ள தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால் தேர்வான 15 பேர் சிறப்பு பிரிவுகள் மூலமாக உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கேரளா, தமிழகம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் தேர்தலை கருத்தில் கொண்டு இந்தத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்திற்குப் பிறகு, பொதுச் செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் கட்சியின் தலைவர் தேர்தலை நடத்த காரிய கமிட்டி தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார்.

ஆனால் அகில இந்திய தலைவர் தேர்தலும் செயற்குழு தேர்தலும் ஒன்றாக நடத்த முடியுமா, அல்லது தலைவர் தேர்தலுக்குப் பிறகு, செயற்குழு தேர்தல் நடத்தப்படுமா என்பதில் இன்னும் தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை. தாமதத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். காங்கிரஸ் காரிய கமிட்டி என்பது உயர் நிர்வாக அதிகாரங்களை உடைய தலைவர்களைக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பு . இதில் கட்சி தலைவர், நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர், 23 உறுப்பினர்கள் இருப்பர். அதில் 12 பேர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி யால் தேர்வு செய்யப்பட்டவர்கள். மீதமுள்ள 11 பேர் கட்சி தலைவரால் தேர்வு செய்யப்படுவர். கூட்டு சிந்தனை மற்றும் நிறுவன விஷயங்கள், கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து முடிவெடுப்பதற்காக, நரசிம்மராவ் காலத்தில் நாடாளுமன்ற வாரியம் என்ற ஒரு அமைப்பு காங்கிரஸ் கட்சியில் உருவாக்கப்பட்டது. இந்த வாரியத்தை புதுப்பிக்க வேண்டும் என்று கட்சியின் முக்கியஸ்தர்கள் இப்போது கோரியுள்ளனர். காங்கிரஸ் காரியக் கமிட்டி “காங்கிரஸ் தலைவர் மற்றும் ஒன்பது உறுப்பினர்களைக் கொண்ட ஒரு நாடாளுமன்ற வாரியத்தை அமைக்கும். அவர்களில் ஒருவர் நாடாளுமன்றத்தில் கட்சியின் தலைவராக இருப்பார். காங்கிரஸ் தலைவரே இந்த குழுவின் தலைவராக இருப்பார் என்று கட்சியின் அரசியலமைப்பு கூறுகிறது.

காங்கிரஸ் செயற்குழு நாடாளுமன்ற வாரிய உறுப்பினர்களையும், மத்திய மற்றும் மாநில சட்டமன்றத்தின் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கும் தேர்தல் பிரச்சாரங்களை நடத்துவதர்கும் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியால் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்கள் கொண்ட குழுவை உருவாக்கும். காரியக் கமிட்டியின் 25 உறுப்பினர்களில் 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டால், காங்கிரஸ் தலைவரால் அவர்களை விருப்பப்படி நீக்க முடியாது. இவற்றில் பாதி நபர்களை தேர்வு செய்த பிறகு காரிய கமிட்டி பின்னர் நாடாளுமன்ற வாரியத்தை அமைக்கும். செயற்குழு கமிட்டியின் பாதி உறுப்பினர்கள் இந்த வாரியத்தில் உறுப்பினர்களாக இருப்பார்கள், மீதி உறுப்பினர்கள் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வாரியம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தலைவர்கள் வற்புறுத்தி வருவதாலும் நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் வர இருப்பதாலும் இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் இல்லை என்பது கிட்டத்தட்ட ஊர்ஜிதமாகி இருக்கிறது. பின் எப்போது தான் தேர்தல் நடக்கும்? கத்தரிக்காய் என்றாவது ஒருநாள் முற்றத்தான் செய்யும் அப்போது கடைவீதிக்கு வந்துதானே தானே ஆக வேண்டும்.

You'r reading அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் எப்போது? Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - இளசுகளை கவர்ச்சியில் கட்டிப்போடும் கருப்பழகி.. பிரியங்கா குளியல் போஸால் பரபரப்பு..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்