ஐதராபாத் அணியை அடித்து நொறுக்கிய டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!

Delhi Capitals won by 39 runs against SRH

ஐபிஎல் - 2019 தொடரின் 30வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் நேற்று இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் பலப்பரிட்சை நடத்தின.

முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 45 ரன்கள் எடுத்தார்.

ஐதராபாத் அணி சார்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும் புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.

பின்னர், 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணிக்கு, டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் சிம்ம சொப்பனமாக மாறினர்.

18.5 ஓவர்களிலேயே ஐதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 116 ரன்கள் மட்டுமே எடுத்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக துவக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர் 51 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 41 ரன்களும் எடுத்தனர். ஆனால், அதற்கு அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க எண்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்து அணியை வெற்றிப் பாதையில் இருந்து தோல்வி பள்ளத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நட்சத்திர பந்துவீச்சாளர் ரபடா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கிரிஸ் மோரிஸ் மற்றும் கீமோ பால் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய கீமோ பால் ஆட்ட நாயகனாக தேர்வானார்.

சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் தோல்வி அடைந்ததாலும், சன்ரைசர்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றிப் பெற்றதாலும், புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கு அடுத்தபடியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 2வது இடத்தை பிடித்துள்ளது. 3வது இடத்துக்கு கொல்கத்தா அணி தள்ளப்பட்டுள்ளது.

You'r reading ஐதராபாத் அணியை அடித்து நொறுக்கிய டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - 200 பேருக்கு 2 தொகுதிகளில் ஓட்டு- அலட்சியம் காட்டும் தேர்தல் அதிகாரிகள்..

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்