பாஜகவின் ஸ்லீப்பர் செல்லா? திமுகவை புறக்கணித்த மமதா- டெல்லி அரசியலில் பரபரப்பு!

Mamata doubts over DMK to support BJP?

மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி ஒருங்கிணைத்திருக்கும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்துக்கு திமுகவை அழைக்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்ததில் அதிருப்தியானதாலேயே திமுகவை மமதா அழைக்கவில்லை என கூறப்படுகிறது.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளை மமதா பானர்ஜி, சந்திரசேக ராவ், சந்திரபாபு நாயுடு ஆகியோர் முயற்சித்து வருகின்றனர். முதலில் இந்த ஒருங்கிணைப்பை தொடங்கி வைத்தவர் மமதா பானர்ஜி.

அப்போது திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார். டெல்லியில் கனிமொழியையும் மமதா பானர்ஜி சந்தித்து பேசியிருந்தார். அச்சந்திப்பின் போது, தேசிய அளவிலான கூட்டணியில் திமுகவும் இணைய வேண்டும்; கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க விரும்புகிறென் என மமதா கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த கனிமொழி, கூட்டணி குறித்து ஸ்டாலின் தான் முடிவு செய்ய வேண்டும். அவருடன் பேசிவிட்டு தகவல் தருகிறேன் என கூறினார். அதே கையோடு ஸ்டாலினுக்கும் தகவல் பாஸ் செய்தார் கனிமொழி.

ஆனால் ஸ்டாலின் தரப்போ, மமதாவின் முயற்சிகள் குறித்து அக்கறை காட்டவில்லை. மமதாவுக்கும் எந்த பதிலும் தரவில்லை. மமதாவும் சில முறை திமுகவுக்கு ஆதரவான ட்விட்டுகளைப் போட்டு பார்த்துவிட்டு அமைதியாகிவிட்டார்.

இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தார். அதுவரை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் குறித்து யாரும் அறிவிக்கவில்லை.

ஸ்டாலினின் அறிவிப்பு தேசிய அரசியலில் எதிர்க்கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சந்திரபாபு நாயுடு, மமதா பானர்ஜி ஆகியோர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்திடம் பேசிய மமதா பானர்ஜி, ஸ்டாலின் இப்படி ஒரு அறிவிப்பை ஏன் வெளியிட்டு குழப்பத்தை உருவாக்கினார்.... எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பேச வேண்டியதை பொது மேடையில் எப்படி பேசலாம்? பாஜகவுக்கு மறைமுகமான ஆதரவு நிலை எடுக்கிறதா திமுக? என ஆதங்கப்பட்டிருக்கிறார்.

இதற்கு பதிலளித்த சிதம்பரம், ஸ்டாலின் அறிவிப்பு காங்கிரஸுக்கே அதிர்ச்சிதான்... நாங்களே அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை. இந்த அறிவிப்பு எங்களுக்கும் உடன்பாடு இல்லை என பதிலளித்திருக்கிறார். இந்நிலையில் கொல்கத்தாவில் வரும் 19-ந் தேதி எதிர்க்கட்சிகளின் சங்கமத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் மமதா.

இந்நிகழ்ச்சிக்கு திமுகவை மமதா அழைக்கவில்லை. மமதாவின் இந்த புறக்கணிப்பு திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன் திமுக ஆலோசனை நடத்தி வருகிறது என்கின்ற அறிவாலய வட்டாரங்கள்.

-எழில் பிரதீபன்

You'r reading பாஜகவின் ஸ்லீப்பர் செல்லா? திமுகவை புறக்கணித்த மமதா- டெல்லி அரசியலில் பரபரப்பு! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மம்தா நடத்தும் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டம் - திமுக வுக்கு அழைப்பில்லை!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்