லோக்சபா தேர்தல்: பாமகவை தொடர்ந்து தேமுதிகவுடன் அதிமுக விறுவிறு பேச்சுவார்த்தை

Lok Sabha poll: PMK Followed by AIADMK talks with DMDK

லோக்சபா தேர்தலில் பாமகவை வளைத்ததைப் போல தேமுதிகவை மீண்டும் கூட்டணியில் இடம்பெற வைப்பதற்கான பேச்சுவார்த்தைகளை அதிமுக முன்னெடுத்துள்ளது.

திமுக தலைமையில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், சிறுபான்மை கட்சிகள் என மெகா கூட்டணி உருவாக இருக்கிறது. இதற்கு எதிராக இதர கட்சிகளை இணைத்து வலிமையான கூட்டணி உருவாக வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம்.

இதற்காக அதிமுக அணிகளை ஒருங்கிணைப்பது, பாமக, தேமுதிக ஆகியவற்றை வளைப்பது உள்ளிட்ட அனைத்து முயற்சிகளுக்கும் பின்புலமாக பாஜக இருந்து வருகிறது. இதனை வெளிப்படுத்தும் வகையில்தான் வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.

இதனிடையே அண்மையில் அதிமுகவில் தொகுதி பங்கீட்டுக்கான குழு முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த குழுதான் தற்போது வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கான அனைத்து முஸ்தீபுகளையும் முன்னெடுத்து வருகிறதாம்.

பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்ட 2-வது நாளிலேயே தேமுதிக பொதுச்செயலர் விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷுடன் கேபி முனுசாமி தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். தேமுதிகவைப் பொறுத்தவரையில் தேர்தலில் எந்த கட்சி தாரளமாக செலவு செய்யுமோ அங்கேதான் கூட்டணி என்பதில் திட்டவட்டமாக இருக்கிறது.

இதனால்தான் முதலில் தினகரனை நம்பியிருந்தது. ஆனால் பணம் விஷயத்தில் தினகரனை நம்பவே முடியாது என்பதால் அதிமுக பக்கம் கடைக்கண்ணை திருப்பியது தேமுதிக. இதை உணர்ந்தே இப்போது அதிமுகவும் பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறதாம்.

- எழில் பிரதீபன்

You'r reading லோக்சபா தேர்தல்: பாமகவை தொடர்ந்து தேமுதிகவுடன் அதிமுக விறுவிறு பேச்சுவார்த்தை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - தமிழகத்தின் பெருமையை நிலை நிறுத்தியுள்ளீர்கள்.. பத்ம விருது பெற்றவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்