திருநாவுக்கரசரை தூக்கி அடித்து நினைத்ததை சாதித்த ஸ்டாலின்.... புதிய தமிழக காங். தலைவர், செயல் தலைவர்களுக்கு அறிவாலய கதவு திறந்தது!

TNCC President KS Azhagiri meets MK Stalin

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர், ஸ்டாலினின் குட்புக்கில் இடம்பெற பலமுறை போராடியும் அறிவாலயம் அவருக்கான கதவை எப்போதுமே அடைத்தே வைத்திருந்ததை கே.எஸ். அழகிரி ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டி மகிழ்கின்றனர்.

தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவராக திருநாவுக்கரசர் நியமிக்கப்பட்ட முதலே திமுகவுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். குறிப்பாக ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது பகிரங்க மோதல் போக்கை கடைபிடித்தார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக மீதான பழைய பாசத்தில் வலம் வந்தார் திருநாவுக்கரசர். சசிகலா, தினகரன் ஆகியோருக்கு ஆதரவாகவும் திமுகவுக்கு எதிராகவும் பேட்டி அளித்து வந்தார் திருநாவுக்கரசர்.

ஒருகட்டத்தில் தினகரனை ராகுல் காந்தியோடு கூட்டணி விவகாரம் குறித்தும் பேச வைத்தார் அவர். மேலும் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயார் என்றும் தினகரன் பேட்டி அளித்து புயலை கிளப்பினார்.

அதேபோல் ரஜினிகாந்துடனும் நெருக்கம் பாராட்டினார் திருநாவுக்கரசர். இதனால் திருநாவுக்கரசரை திமுக முற்றாக புறக்கணித்தது. டெல்லியில் சோனியா காந்தியை சந்தித்த கையோடு சென்னைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்தார் சந்திரபாபு நாயுடு.

அச்சந்திப்பின் போது தாமும் இருக்க விரும்பினார் திருநாவுக்கரசர். ஆனால் திமுக தரப்பில் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி மேலிடப் பிரதிநிதி சஞ்சய் தத், ஸ்டாலினை சந்தித்தார்.

அப்போதாவது தம்மை அழைப்பார் ஸ்டாலின் என எதிர்பார்த்தார் திருநாவுக்கரசர். ஆனால் திமுக தரப்பில் திட்டவட்டமாக திருநாவுக்கரசரை அழைக்கக் கூடாது என சொல்லிவிட்டனர்.

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி சிலை திறப்பு விழாவிலும் கூட திருநாவுக்கரசை திமுக கண்டுகொள்ளவில்லை. காங்கிரஸ் கூட்டணி உறுதியானபோது, திருநாவுக்கரசரை மாற்றியாக வேண்டும்; அவர் ஒரு நம்பகமான தலைவர் இல்லை; அவரை வைத்துக் கொண்டு திமுக கூட்டணி சிறப்பாக செயல்பட முடியாது என டெல்லி மேலிடத்திடம் ஸ்டாலின் தரப்பு வலியுறுத்தி இருந்தது.

இதனால் திருநாவுக்கரசர் பதவிக்கு எந்த நேரத்திலும் வேட்டு என்கிற நிலை இருந்தது. திமுகவின் நெருக்கடியைத் தொடர்ந்தே திருநாவுக்கரசரிடம் ராஜினாமா கடிதத்தை வாங்கினார் ராகுல். பின்னர் திருநாவுக்கரசை தூக்கி அடித்துவிட்டு கே.எஸ். அழகிரி தலைவராக்கப்பட்டார்.

இந்நிலையில் அழகிரி மற்றும் செயல் தலைவர்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றனர். இதுவரை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவருக்கு திறக்காத அறிவாலய கதவுகள் இன்று திறந்துவிட்டதே தங்களுக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்கின்றனர் கே.எஸ். அழகிரி ஆதரவாளர்கள்.

You'r reading திருநாவுக்கரசரை தூக்கி அடித்து நினைத்ததை சாதித்த ஸ்டாலின்.... புதிய தமிழக காங். தலைவர், செயல் தலைவர்களுக்கு அறிவாலய கதவு திறந்தது! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திமுக தலைவர் ஸ்டாலினுடன் தமிழக காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் சந்திப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்