ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறை! கலங்க வைத்த கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியை!!

A Govt. Teacher creates Digital Class Room in her own money

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தனக்கு வந்த ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறையை ஏற்படுத்தி அசர வைத்திருக்கிறார். அவரது இந்தச் செயலை கல்வி அதிகாரிகள் பாராட்டி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் இடைநிலை ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார் இரா.ஹேம்குமாரி. கடந்த 13 ஆண்டுகளாக இதே பள்ளியில் பணிபுரிந்து வருகிறார்.

இவருக்குக் கடந்த நவம்பர் மாதம் முதுகலை ஆங்கில பட்டத்துக்குரிய (M.A English) ஊக்கத்தொகையான 60 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. அதை வைத்து இந்த வகுப்பறையை உருவாக்கியிருக்கிறார்.

இதைப் பற்றிப் பேசும் ஹேம்குமாரி, ' என்னால் முடிந்தவரை மாணவர்களுக்கு எளிதாக புரியும்படி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று எப்போதும் விரும்புவேன். இப்போது நான்காம் வகுப்பு மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்து வருகிறேன்.

ஒவ்வொரு வருடமும் நான் அதிக முக்கியத்துவம் கொடுப்பது மெல்ல கற்கும் மாணவர்களுக்கு தான். அதற்கு காரணம் அவர்களுக்கு கல்வியில் ஏற்படுகின்ற சந்தேகங்களைப் போக்கி ஆர்வத்தை உண்டு பண்ண வேண்டும் என்பதால்தான்.

என்னுடைய வகுப்பறையில் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களோ அல்லது எனது மடிக் கணினி மூலம் மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சிகளையும் பல்வேறு புத்தகத்தில் உள்ள பாடங்களையும் வீடியோக்கள் மூலமாக கற்றுக் கொடுப்பது வழக்கம். அப்போது அனைவருமே ஆர்வமாக அதை ரசித்துப் பார்த்தனர்.

அவ்வாறு பார்க்கும்போது பல மாணவர்கள், படங்கள் தெரியவில்லை என்று எழுந்து நின்றே பார்ப்பார்கள் அவ்வாறு பார்ப்பது எனக்கு மனதில் வலியை ஏற்படுத்தும். அதற்காகவே பெரிய திரையில் என் மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று விரும்பினேன்.

அந்த விருப்பத்தின் அடிப்படையில் தான் தற்போது எனது வகுப்பறையில் டிஜிட்டல் போர்டு பொருத்தி உள்ளேன். எனது சொந்த செலவில் செய்தது மட்டற்ற மகிழ்ச்சி. எனது பலநாள் கனவு என்று கூடக் கூறலாம். இதற்காக பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எனக்கு எந்த வகையிலும் நன்கொடைகள் கிடைக்கவில்லை.

பிறகு என் சொந்த செலவிலேயே செய்யலாம் என்று முடிவெடுத்தேன். எனக்கு முதுகலை ஆங்கில பட்டத்துக்குரிய (M.A English) ஊக்கத்தொகை வந்தது. அதை முழுவதுமாக எங்கள் வகுப்பிற்கு செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மீதமுள்ள தொகையை சம்பள பணத்தில் இருந்து செலவு செய்து வகுப்பறையில் ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு பொருத்தினேன். இதன் மூலமாக மாணவர்களின் இடைநிற்றலைத் தடுக்கலாம். அவர்களுக்குக் கல்வியின் மீது அதிகமான ஆர்வத்தை அதிகப்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறேன்' என்கிறார் நெகிழ்ச்சியுடன்.

You'r reading ஊக்கத் தொகையில் டிஜிட்டல் வகுப்பறை! கலங்க வைத்த கடலூர் அரசுப் பள்ளி ஆசிரியை!! Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - திடீர் மாரடைப்பால் உயிரிழந்த கனடா தொழிலதிபர் - ரூ1500 கோடி 'அம்போ'வான சோகம்!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்