மக்களுக்கு மணல் கிடைக்காத நிலையில் குவாரிகள் எதற்கு? உயர்நீதிமன்றம் சாடல்.

The quarries can be closed as sand is not available to the common people , High Court question

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த
மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். ஆனால் அவர் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவிலான இடத்தில் மற்றும் சுற்றியுள்ள பட்டா நிலங்களில் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளி கடத்தி விற்பனை செய்து வந்தார். இதனால் விவசாயத்திற்கான நீர் ஆதாரம் பாதிக்கப்படுகிறது என அப்பகுதி விவசாயிகள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனிடையே பெயரளவுக்கு கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் ஒரு புகார் செய்யப்பட்டு மனுவேல் ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணல் கடத்தலும் தடையின்றி நடந்துவந்தது.

இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மணல் கடத்தலைத் தடுக்க உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சேரன் மகாதேவி துணை ஆட்சியர் பிரதீக் தயாள் இது குறித்து ஆய்வு நடத்தி(?) விதிகளை மீறி மணல் கடத்தலில் ஈடுபட்ட மனுவேல் ஜார்ஜுக்கு 9 கோடியே 57 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டு இருந்தார். மேலும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் மோகனை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது அந்த குவாரியில் மணல் அள்ளுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று இந்த வழக்கின் விசாரணை நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு அரசுக்கு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர். “அரசு இணையத்தில் சாதாரண மனிதனுக்கு இலகுவாக மணல் கிடைக்கவில்லை. அப்புறம் அரசு ஏன் மணல் குவாரி நடத்த வேண்டும்? மணல் குவாரிகளை மூடிவிடலாமே? ஆன்-லைனில் விற்பனை செய்யப்படும் மணல், இடைத்தரகர்களால் கூடுதல் விலைக்கே மக்களை சென்றடைகிறது. இடைதரகர் குறுக்கீடு இன்றி சாதாரண நபருக்கு உரிய விலையில் மணல் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணையை வரும் 28 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

You'r reading மக்களுக்கு மணல் கிடைக்காத நிலையில் குவாரிகள் எதற்கு? உயர்நீதிமன்றம் சாடல். Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - கேரள தங்க கடத்தல் வழக்கு : குற்றப் பத்திரிகையில் முதல்வர் பெயர்.

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்