திறக்கப்பட்டது தியேட்டர்கள் திடீர் மரியாதை ரசிகர்களுக்கு..

தமிழகத்தில் இன்று சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் ரசிகர்களின் ஆதரவு ஏனோ குறைவாகவே இருந்தது. சினிமா ரசனைக்கு புகழ் பெற்ற ஊர் மதுரை அங்கு இன்று சில தியேட்டர்களில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களின் தொகுப்பு: மதுரை கல்லாணை திரையரங்கில் எம்ஜிஆர் நடித்த 'நினைத்ததை முடிப்பவன்' என்ற படம் திரையிடப்பட்டிருந்தது. வழக்கமாக இந்த தியேட்டரில் காலைக் காட்சி கிடையாது என்பதால், யாருமே வரவில்லை. வயதான மூதாட்டி ஒருவர் மட்டும் தன்னுடைய பேரனுடன் தியேட்டருக்கு வந்திருந்தார். 10 பேருக்குக் குறைவாக இருந்தால் படம் ஓட்டப்படாது. ஆனால், அந்தப் பாட்டிக்கும், பேரனுக்கும் ராஜமரியாதை கொடுத்து படத்தை ஓட்டினார்களாம்.. மதுரை சென்ட்ரல் தியேட்டரில், அர்ஜூன் நடித்த 'ஆயுத பூஜை' படம் திரையிடப்பட்டிருந்தது. 1,732 இருக்கைகள் கொண்ட அந்தத் தியேட்டரில் ஒவ்வொரு காட்சிக்கும் 10 முதல் 30 பேர் மட்டுமே வந்திருந்தனர். இருந்தாலும் அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படாமல் படம் திரையிடப்பட்டது.

அம்பிகா தியேட்டரில் 'ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்' எனும் ஹாலிவுட் படம் திரையிடப்பட்டு இருந்தது. காலைக்காட்சிக்கு வெறும் 8 பேர் மட்டுமே வந்திருந்ததால், படம் ஓட்டப்படவில்லை. ரசிகர்களுக்குப் பணத்தைத் திரும்பக் கொடுத்ததுடன், பாப்கார்ன் ஒன்றையும் தியேட்டர் காரங்க இலவசமாகக் கொடுத்து அனுப்பி வைத்தார்களாம். சமூக இடைவெளி கை கணக்கிட்டு ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் அமர்ந்து தான் இன்று படம் பார்க்க அனுமதிக்கப்பட்டது.இனி இப்படித்தான் படம் பார்க்கணுமாம்..!
இது யாரு..
அவன் யாரு?
அந்த படத்தில் வந்தானே
அவனா இவன்?
இவ யாரு?
இதற்கு முன் எந்த படத்தில் நடிச்சா?
லேட்டாகப் போயி..
இதற்கு முன்னால என்ன நடந்தது என..பக்கத்தில் உள்ளவர்களிடம் கேள்வி கேட்டுக்கிட்டே படம் பார்ப்போமே...? அதெல்லாம் கனவா? என்று சில ரசிகர்கள் கமெண்ட் அடித்தபடியே சென்றதையும் காணமுடிந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 35 தியேட்டர்கள் திறக்கப்பட்டது. ஆனால், புதிய திரைப்படங்களை தயாரிப்பாளர்கள் வெளியிடாததால், தியேட்டர்களில் எந்தக் காட்சியும் திரையிடப்படவில்லை. ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே அபிராமி, தேவி அபிராமி தியேட்டர் திறக்கப்பட்டு, மாடுகளை வைத்து கோமாதா பூஜை செய்யப்பட்டது. இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர் செந்தில் கூறும்போது, சென்ற 8 மாதங்களுக்குப் பிறகு, தியேட்டர்களை திறந்துகொள்ள அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனை வரவேற்று தியேட்டர்களை சுத்தப்படுத்தி தயார்படுத்தினோம்.

ஆனால், புதிய திரைப்படங்கள் எதையும் தயாரிப்பாளர்கள் வெளியிடாததால் ரசிகர்கள் வருகை இருக்காது. ஆகவே, எங்களால் தியேட்டர்களை இயக்க முடியவில்லை. 10ஆம் தேதி தியேட்டர்களை திறந்து, எங்களது முறைப்படி கோமாதா பூஜை செய்து, வழிபாடு நடத்தினோம். ஆனால், அனைத்துக் காட்சியும் ரத்து செய்துவிட்டோம். எங்களது தியேட்டர்கள் சங்க தலைமை நிர்வாகம் அனுமதி அளித்தால் மட்டுமே தியேட்டர்களை இயக்குவோம்" என்றார். திரையில் படம் பார்த்து பல மாதங்களாகி விட்டது. இன்றாவது பார்க்கலாம் என தியேட்டருக்கு வந்த சில ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

You'r reading திறக்கப்பட்டது தியேட்டர்கள் திடீர் மரியாதை ரசிகர்களுக்கு.. Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - மத்திய நிலக்கரி ஆணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்