தென் மாவட்டங்களில் கனமழை

மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம்

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக, தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது.

முன்னதாக, கனமழை தொடர்ந்து பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்படலாம் என்பதால் தென் மாவட்ட மீனவர்கள், கேரளாவின் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெதர்மேன், தனது முகநூல் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அதில், “குமரி கடல் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என்றும், அதற்கு ஓகி (ockhi) என பெயரிடப்பப்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது ரேடாரில் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஓகி புயல் நிலப்பரப்பில் வராமல் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் செல்லும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி, திருவனந்தபுரம் ஒட்டிய கடற்கரையில் இந்த புயலானது செல்லும் என்று அவர் கூறியுள்ளார். இந்நிலையில் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது.

இது குறித்து குமரி மாவட்ட வருவாய்துறை ஆணையர் சத்யகோபால் கூறியதாவது, “பலத்த சூறைக்காற்று காரணமாக குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ளன. நேரம் செல்ல செல்ல காற்றின் வேகம் கூடும் என்பதால்
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்" என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் காவல்துறையால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பருவமழை பொய்த்து பல மாதங்களாக காய்ந்து கிடந்த திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்கள், இந்த புயல் மழையை ரசித்து மகிழ்ந்து வருகிறார்கள். குற்றால அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

You'r reading தென் மாவட்டங்களில் கனமழை Originally posted on The Subeditor Tamil

<< PREVIOUS NEWS - ‘கொடிவீரன்’  டிரெய்லர்

NEXT NEWS >> - பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்